மீண்டும் AI வீடியோ வெளியீடு.. தொடர்ந்து ஒபாமாவை வம்புக்கு இழுக்கும் ட்ரம்ப்!
அமெரிக்காவில் இரண்டாவது முறையாக அதிபர் பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். மேலும், கடந்த பைடன் அரசையும் அவ்வப்போது கடுமையாக விமர்சித்து வரும் ட்ரம்ப், அதற்கு முன்பாக ஆட்சி செய்த பராக் ஒபாமாவையும் அவர் விட்டுவைக்கவில்லை. கடந்த வாரம், பராக் ஒபாமாவை கைதுசெய்வது போன்ற AI வீடியோவை டொனால்டு ட்ரம்ப் பகிர்ந்தது உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்குக் காரணமாக, 2016-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்பதைத் தடுக்க, ஒபாமா மற்றும் அவரது அதிகாரிகள் ஈடுபட்டதாகக் கூறப்படது. மேலும், இதுகுறித்து ஒபாமாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குனர் துளசி கப்பார்டு தெரிவித்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த ஒபாமா, ”ட்ரம்பின் வினோதமான குற்றச்சாட்டுகள் அபத்தமானவை. அவர் மீது இருக்கும் பாலியல் வழக்கை திசை திருப்பும் பலவீனமான முயற்சி. அதிபர் பதவிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இந்த வெள்ளை மாளிகையிலிருந்து தொடர்ந்து வரும் முட்டாள்தனமான, தவறான தகவல்களை எங்கள் அலுவலகம் பொருட்படுத்துவதில்லை. ஆனால் இப்போது கூறப்படும் குற்றச்சாட்டு அப்படி கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மீண்டும் ஒரு ஏஐ வீடியோவை அதிபர் டொனால்டு ட்ரம்ப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், வெள்ளை நிற காரில் ஒபாமா தப்பியோடுவதாகவும், அவரைப் பிடிக்கும் நோக்கில் அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட போலீஸ்கார்கார்கள் துரத்துவதும் போன்ற படத்தைப் பகிர்ந்துள்ளார். இது, மேலும் அமெரிக்க அரசியலில் புயலைக் கிளப்பியுள்ளது.