ஆறாயிரம் சீனப் பொருட்கள் மீது கூடுதல் வரி: ட்ரம்ப் அதிரடி
சீனாவின் 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே வர்த்தகப் போர் நீடித்து வருகிறது. தனது அறிவுசார் தொழில்நுட்பங்களை சீனா திருடுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. அத்துடன் தனது நாட்டுக்கு ஏற்படும் இழப்பை சரிக்கட்ட சீனாவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப் போவதாக அமெரிக்கா எச்சரித்திருந்தது. எனினும் சீனா தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் சுமார் 6 ஆயிரம் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சுமார் 14 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இந்தக் கூடுதல் வரி வரும் 24 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவித்துள்ளார். சீனா மேற்கொண்ட நியாயமற்ற வர்த்தகம் காரணமாகவே இந்த வரி விதிக்கப்படுவதாகவும், இதுவரை வழங்கிய வாய்ப்புகளை சீனா புறந்தள்ளிவிட்டதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதற்கு சீனா பதிலடி நடவடிக்கை எடுத்தால், மேலும் 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.