மீண்டும் மீண்டுமா..!! இந்தியாவை நெருக்கடிக்கு தள்ளும் US டிரம்ப் பேச்சு..மௌனம் காக்கும் மோடி.,
அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் வாஷிங்டன் வெள்ளை மாளிகை சந்திப்புக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்துத்துப் பேசினார், அப்போது " ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது. இந்தியா ஏற்கனவே பின்வாங்கத் தொடங்கிவிட்டனர். கிட்டத்தட்ட ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்திவிட்டது" என்று தெரிவித்தார். தொடர்ந்து இந்த சந்திப்பில், உக்ரைனின் பாதுகாப்பு, எரிசக்தி தேவைகள் மற்றும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளை அதிகரிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தியா குறித்தான டிரம்பின் கருத்து பேசுபொருளாகியிருக்கிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை ரத்து செய்தன. இதனையடுத்து, ரஷ்யா இந்தியாவுக்கு மலிவு விலையில் கச்சா எண்ணெய் வழங்கத் தொடங்கியது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்யத் தொடங்கியதிலிருந்து, அமெரிக்கா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஏனென்றால், ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்குவதன் மூலம் உக்ரைனுடனான போருக்கு நிதியளிக்க விளாடிமிர் புடினுக்கு இந்தியா உதவி வருவதாக அமெரிக்கா கூறி வருகிறது. மேலும், டிரம்ப் நிர்வாகம் ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா மீது 25% கூடுதல் வரியும் விதித்திருந்தது. ஏற்கனவே பரஸ்பர வரியாக 25% வரி விதித்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்துவதாகப் பிரதமர் மோடி தன்னிடம் உறுதியளித்துள்ளதாகக் டிரம்ப் கூறியிருந்தார்.
அதுமட்டுமில்லாமல், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போரைத் தீர்ப்பது எனக்கு எளிது. போர்களை முடிவுக்குக் கொண்டு வருவதை நான் விரும்புகிறேன் என்றும் காசா போர்நிறுத்தம் தான் தீர்த்து வைத்த எட்டாவது மோதல் என்றும் டிரம்ப் கூறினார்.
மேலும், அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படாதது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அவர், "எனக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. வேறு ஒருவருக்குக் கிடைத்தது. அவர் மிகவும் நல்ல பெண்மணி. அவர் யார் என்று எனக்குத் தெரியாது, ஆனால் அவர் மிகவும் பெருந்தன்மையுடன் இருந்தார். அதனால், அந்தப் பரிசுகளைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. நான் உயிர்களைக் காப்பாற்றுவது குறித்து மட்டுமே கவலைப்படுகிறேன்." என்று பேசினார்.
டிரம்ப்பின் கருத்து குறித்து பதிலளித்த இந்தியா தரப்பில் அறிக்கை மூலம் பதிலளிக்கப்பட்டது அதில், "எங்கள் இறக்குமதிக் கொள்கைகள் முழுமையாக நுகர்வோரின் பாதுகாப்பை அடிப்படையாக வைத்து வழிநடத்தப்படுகின்றன" என்று சூசகமாக பதிலளித்தது. மேலும் அந்த அறிக்கையில், டிரம்ப் பெயரையோ அல்லது டிரம்ப் கருத்து குறித்து மறுக்கவோ அல்லது ஆதரிக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ரஷ்யா தரப்பு கூறுகையில், "அமெரிக்கா மற்றும் இந்தியா நாடுகளுக்கு இடையே ரஷ்யா தலையீடாது. ரஷ்யாவிலிருந்து இந்தியவுக்கு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயால் இந்தியப் பொருளாதாரத்திற்கும் இந்திய மக்களின் நலனுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளது. இந்தநிலையில், டிரம்ப் மீண்டும் அதே கருத்தை தெரிவித்திருப்பது இந்தியாவை ஒரு வித நெருக்கடிக்குள் தள்ளுகிறது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.