ட்ரம்பின் பரஸ்பர வரிவிதிப்பு | 30-40 சதவீதம் வரை விலை உயரப்போகும் ஐபோன்கள்!
அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்ப், சமீபத்தில் உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் முடிவை அமல்படுத்தினார். இதன்படி இந்தியப் பொருள்களுக்கும் 26% இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் 10% வரி ஏப்ரல் 5 முதல் நடைமுறைக்கு வரும், மீதமுள்ள 16% ஏப்ரல் 10 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா தவிர சீனா, கம்போடியா, வியட்நாம், மியான்மர், இலங்கை, வங்கதேசம், செர்பியா, தாய்லாந்து, சீனா, தைவான், பாகிஸ்தான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட சில நாடுகளுக்கு 10% வரி மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் விதித்துள்ள புதிய வரிகளால் ஐஃபோன்கள் விலை 30 முதல் 40 சதவீதம் வரை உயரக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக அண்மையில் வெளியான ஐஃபோன் 16 ப்ரோ ஃபோன்கள் விலை 2 லட்சம் ரூபாயை தொடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன்களில் பெரும்பகுதி சீனாவில் உற்பத்தி செய்யப்படுவதால் வரி விதிப்பின் பாதிப்புகள் காரணமாக அதன் விலை உயரும் எனக் கூறப்படுகிறது. அதேநேரம், ஆப்பிளின் பிரதான போட்டியாளரான சாம்சங்கிற்கு ட்ரம்ப்பின் வரி விதிப்பு பலன்கள் செல்லக்கூடும் என்றும் சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர். சாம்சங் தயாரிப்புகள் மிகப்பெரும்பாலானவை சீனாவுக்கு வெளியே தயாரிக்கப்படுவதுதான் இதற்கு காரணம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதற்கிடையே அமெரிக்க பங்குச்சந்தைகளில் ஆப்பிள் நிறுவன பங்குகள் விலை வெகுவாக சரிந்துள்ளது.
முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் பரஸ்பர வரிகளை அறிவித்த பிறகு, உலகின் 500 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு 208 பில்லியன் டாலர் அளவுக்கு சரிந்திருப்பதாகத் தகவல் வெளியாகி இருந்தது.