பாரிஸ் உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறுகிறது: ட்ரம்ப் அதிரடி
பருவநிலை மாறுபாடு தொடர்பாக போடப்பட்ட பாரிஸ் உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
மேலும், பாரிஸ் உடன்படிக்கையை மாற்றி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர், "பாரிஸ் உடன்படிக்கையால் அமெரிக்காவுக்கு எந்தவித பலனும் கிடைக்கப்போவதில்லை. பாரிஸ் உடன்படிக்கையை ஏற்றால் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகம் போன்றவை கடுமையான பாதிப்புக்குள்ளாகும். ஒவ்வொரு நாளும் அமெரிக்க மக்களுக்காகவே நான் போராடி வருகிறேன். அமெரிக்கா மற்றும் அதன் மக்களைக் காக்கும் எனது தலையாய கடமையை நிறைவேற்றும் வகையில் பாரிஸ் உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறுகிறது. அதேநேரம் பாரிஸ் உடன்படிக்கையை அமெரிக்க மக்கள், வேலைவாய்ப்பு மற்றும் வர்த்தகம் போன்றவற்றுக்கு நன்மை செய்யும்வகையில் முழுமையாக மாற்றி அமைத்து, அதில் அமெரிக்காவை இணைத்துக் கொள்ளும் பேச்சுவார்த்தைகள் தொடங்கும்" என்றார். மேலும் இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளுக்கு தான் பாரிஸ் உடன்படிக்கையால் பலன் கிடைக்கும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.