அணு ஆயுத சோதனைகளை தடுத்து நிறுத்தும் வகையில் வடகொரியா மீது புதிய தடைகளை விதிக்கும் உத்தரவுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
ஐ.நா. பல்வேறு தடைகளை விதித்த போதிலும் வடகொரியா தனது அணு ஆயுத சோதனைகளை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனால் ஆவேசம் அடைந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அந்நாட்டை முற்றிலும் அழித்து விடப் போவதாக ஐ.நா.வில் ஆக்ரோஷமாக பேசினார். அவரது இந்த பேச்சுக்கு வடகொரியா தரப்பில் பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வடகொரியாவை பணிய வைப்பதற்காகவும், அந்நாட்டின் வருவாயை முற்றிலும் முடக்கும் வகையிலும் புதிய தடைகளை அமெரிக்கா கொண்டு வந்துள்ளது. அதற்கான உத்தரவில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று கையெழுத்திட்டார்.
இதன் மூலம் வடகொரியாவுடன் வர்த்தக தொடர்பு வைத்திருக்கும் தனியார் நிறுவனங்கள், நிதி அமைப்புகள் மீது அமெரிக்க அரசால் இனி நடவடிக்கை எடுக்க முடியும். வடகொரியாவுடன் வர்த்தகம் செய்து வரும் சீன வங்கிகளையும் கட்டுபடுத்துமாறு அந்நாட்டின் மத்திய வங்கிக்கும் ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த உத்தரவில் கையெழுத்திட்ட பின் பேசிய டொனால்டு ட்ரம்ப், வடகொரியாவின் வருவாயை அனைத்து வகையிலும் தடுத்து நிறுத்தும் அளவுக்கு இந்த தடை உத்தரவு வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் அந்நாட்டின் ஜவுளி துறை, மீன் வளம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி துறைகள் வெகுவாக பாதிக்கும் என தெரிவித்தார். இந்த புதிய தடை மூலம் அமெரிக்கா அல்லது வடகொரியா என ஏதேனும் ஒரு நாட்டில் மட்டுமே வெளிநாட்டு நிதிஅமைப்புகளால் வர்த்தகம் மேற்கொள்ள முடியும்.
ஏற்கெனவே வடகொரியா மீது ஐ.நா. 9 சுற்றுகள் தடைவிதித்துள்ள நிலையில், அந்நாட்டில் முதலீடு செய்வது உள்பட பல்வேறு விவகாரங்களுக்கு தடை விதிக்க ஐரோப்பிய யூனியன் முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வடகொரியா தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்களின் சொத்துகளை முடக்கவும் ஐரோப்பிய யூனியன் விரும்புவதாக தெரியவந்துள்ளது. ஐ.நா.வின் ஒப்புதலுடன் இந்த தடைகளும் விதிக்கப்பட்டால் வடகொரியாவுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்படலாம் என கருதப்படுகிறது.

