ட்ரம்ப் அதிரடி | நாசாவில் இருந்து இந்திய வம்சாவளி பெண் அதிகாரி நீக்கம்! யார் இந்த நீலா ராஜேந்திரா?
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் குடியேற்றக் கொள்கை, வரிவிதிப்பு, விசா கட்டுப்பாடுகள், ஆட்குறைப்பு உள்ளிட்டவையும் அடக்கம். மறுபுறம் ட்ரம்பின் அமைச்சரவையில் செயல்படும் DOGE துறையில் தலைமை ஆலோசகராக உலகின் நம்பர் ஒன் பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை இயக்குநருமான எலான் மஸ்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
எலான் மஸ்க்கின் ஆலோசனைப்படி, அரசில் தேவையற்ற செலவுகளை குறைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஏராளமான அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் பல்வேறு அமைச்சகங்களில் சில துறைகளின் செயல்பாட்டை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், ட்ரம்பின் நிர்வாக உத்தரவால் அமெரிக்க விண்வெளி கழகமான நாசாவில் பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் அதிகாரியான நீலா ராஜேந்திரா பணிநீக்கம் செய்யப்பட்டார். நாசாவின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் துறை (டி.இ.ஐ) தலைவராக நீலா ராஜேந்திரா பணியாற்றி வந்தார். இதற்கிடையே டி.இ.ஐ துறையை ரத்துசெய்ய ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டது. அத்துறையில் பணியாற்றிய அனைத்து ஊழியர்களையும் நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நீலா ராஜேந்திராவை தக்க வைத்துக்கொள்ள நாசா நடவடிக்கை எடுத்தது. அதன்படி, அவரது பதவியை 'குழு சிறப்பு மற்றும் பணியாளர் வெற்றி அலுவலகத் தலைவர்' என்று மாற்றியது. ஆனால், இதை ட்ரம்ப் நிர்வாகம் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், நீலா ராஜேந்திராவை பணிநீக்கம் செய்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக நாசா தனது உயர்மட்ட விண்வெளி ஆய்வகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நீலா ராஜேந்திராவின் வெளியேற்றம் குறித்து மின்னஞ்சலில் தகவல் தெரிவித்தது. அதில், ’நீலா ராஜேந்திரா இனி ஆய்வகத்தில் பணிபுரியவில்லை. எங்கள் நிறுவனத்திற்கு அவர் ஏற்படுத்திய நீடித்த பயன்களுக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அவருக்கு நல்வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளது.
யார் இந்த நீலா ராஜேந்திரா?
சேப்பல் ஹில்லில் உள்ள வட கரோலினா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் மற்றும் இசை பட்டதாரியான நீலா ராஜேந்திரா, வேக் ஃபாரஸ்ட் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் 2008இல் முதுகலைப் பட்டம் பெற்றார். படிப்புக்குப் பிறகு, 2013ஆம் ஆண்டு கிளேர்மாண்ட் மெக்கென்னா கல்லூரியின் கிராவிஸ் லீடர்ஷிப் இன்ஸ்டிடியூட்டில் தொழில்முனைவோர் முயற்சிகள் இயக்குநராகப் பொறுப்பேற்றார். அவர் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். பின்னர் பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்க முன்முயற்சியின் (SODI) வடிவமைப்பு இயக்குநர், நிர்வாக இயக்குநர் மற்றும் இணை நிறுவனர் ஆனார்.
அங்கு அவர் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கழித்தார். அவரது வழிகாட்டுதலின் கீழ், நிகரகுவா மற்றும் பெனின் போன்ற நாடுகளில் நகர்ப்புற பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்க உள்ளூர் அரசாங்கங்கள் மற்றும் தொழில்முனைவோருடன் SODI பணியாற்றியது. பின்னர், 2021ஆம் ஆண்டுமுதல் அவர் நாசாவை பன்முகப்படுத்த உதவும் முயற்சிகளுக்காக பணியாற்றி வந்தார். அவரது முக்கிய திட்டங்களில் ஒன்று, விண்வெளிப் பணியாளர்கள் 2030’ ஆகும். இது நாசாவில் பணிபுரிய பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த பெண்களையும் மக்களையும் பணியமர்த்துவதை நோக்கமாகக் கொண்டது. மார்ச் 2025இல், அவர் தலைமை குழு சிறப்பு மற்றும் பணியாளர் வெற்றி அதிகாரியாக பணியாற்றத் தொடங்கினார்.