தாமிரம் 50%.. மருந்துப் பொருட்கள் 200%.. மிரட்டும் ட்ரம்பின் வரிவிதிப்பு.. இந்தியாவுக்கு சிக்கல்!
அமெரிக்கா அதிபராக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பொறுப்பேற்றவுடன் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதில், பிற நாடுகளுக்கான வரிவிதிப்பும் ஒன்று. அந்த வகையில், பிற நாடுகளுக்கான இறக்குமதி வரியை பலமடங்கு உயர்த்தினார். இதில் கடும் அதிருப்தி நிலவியதால், 90 நாட்களுக்கு தற்காலிகமாக வரி உயர்வை நிறுத்திவைத்தார். அதேநேரத்தில், இந்த காலகெடு முடிவதற்குள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள அழைப்பு விடுத்தார்.
அதன்பேரில் சீனா, பிரிட்டன் போன்ற நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும் அடுத்து இந்தியாவுடன் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், இந்தக் காலக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ளதால், பல்வேறு நாடுகள் ஒப்பந்தம் மேற்கொள்ள தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதேநேரத்தில் ஜப்பான், தென்கொரியா, இந்தோனேசியா, வங்கதேசம், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளுக்கு வரி விகித அறிவிப்புடன் கூடிய கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன.
தாமிரத்திற்கு விரைவில் 50% வரி...
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இறக்குமதி செய்யப்பட்ட தாமிரத்திற்கு விரைவில் 50% வரி விதிக்கப்போவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து, இந்தியாவில் பட்டியலிடப்பட்டுள்ள தாமிர சுரங்க நிறுவனங்களின் பங்குகள் இன்று காலை ஆரம்ப வர்த்தகத்தில் சரிந்தன. அதேநேரம், அமெரிக்காவில் உலோகத்தின் விலையில் 12 சதவீதத்திற்கும் மேலாக உயர்வுக்கு வழிவகுத்தது. ட்ரம்ப் குறிப்பிட்ட 50 சதவீத விகிதம் என்பது ஆய்வாளர்களின் எதிர்பார்ப்புகளைவிட அதிகமாக இருந்ததால், அவரின் அறிவிப்பைத் தொடர்ந்து யுஎஸ் காமெக்ஸ் காப்பர் ப்யூச்சர் விலைகள் 12 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தது.
மறுபுறம், இந்த முடிவு இந்தியாவிற்கு பெரும் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில், இது 2024-25ஆம் ஆண்டில் உலகளவில் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள தாமிரம் மற்றும் தாமிர பொருட்களை இந்தியா ஏற்றுமதி செய்தது. இதில், அமெரிக்காவிற்கு 360 மில்லியன் டாலர்கள் அதாவது 17% ஏற்றுமதி செய்துள்ளது.
மருந்துகளுக்கு 200% வரி...
அடுத்து, அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 200% வரி விதிக்கப்போவதாகவும் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார். இருப்பினும், இந்த புதிய வரிகள் அமல்படுத்தப்படுவதற்கு, முன்பு ஒன்று அல்லது ஒன்றரை வருட கால அவகாசம் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க மருந்துப் பொருட்கள் ஏற்றுமதிக்கு அதிக வரி விதிக்கப்பட்டால், அது இந்திய மருந்து நிறுவனங்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். ஏனெனில் அமெரிக்கா, இந்தியாவின் மிகப்பெரிய வெளிநாட்டுச் சந்தையாக உள்ளது.
அரசாங்க தரவுகளின்படி, FY25இல் இந்தியாவின் மருந்து ஏற்றுமதி ஆண்டுக்கு 9.40 சதவீதம் அதிகரித்து 30.46 பில்லியன் டாலர்களாக இருந்தது. இது முந்தைய ஆண்டு $8.1 பில்லியனில் இருந்து 21 சதவீதம் அதிகமாகும். இது இந்தியாவின் மொத்த மருந்து ஏற்றுமதியில் மொத்தம் 40 சதவீதமாகும். இந்தியாவின் ஜெனரிக்ஸ் தொழில் அமெரிக்காவில் மலிவு விலையில் மருந்துகளை வழங்குவதில் முக்கியப் பங்கு வகிப்பதால், இந்தத் துறையின் மீது 200 சதவீத வரி விதிக்கப்படுவது தேவையை கடுமையாகப் பாதிக்கலாம். மறுபுறம், 200 சதவீத வரி விதிப்பு இந்திய மருந்துப் பொருட்களின் விலையை அதிகரிக்கும் என்பதால், அவற்றின் தேவை குறையவும் வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
தாமிரம் மற்றும் மருந்துப் பொருட்களுக்கு மேலதிகமாக, எஃகு, அலுமினியம் மற்றும் ஆட்டோக்கள் மீதும் ட்ரம்ப் வரிகளை விதித்துள்ளார். எதிர்காலத்தில் வரிகள் விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து மரம் வெட்டுதல், குறைக்கடத்திகள் மற்றும் முக்கியமான தாதுக்கள் இறக்குமதி குறித்தும் அவர் ஆய்வு செய்து வருகிறார். இந்தியா 2024-25ஆம் ஆண்டில் உலகளவில் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள செம்பு மற்றும் செம்பு பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதில், அமெரிக்க சந்தைகளுக்கான ஏற்றுமதி 360 மில்லியன் டாலர் அல்லது 17 சதவீதம் ஆகும். வர்த்தக தரவுகளின்படி, சவூதி அரேபியா (26 சதவீதம்) மற்றும் சீனாக்குப் (18 சதவீதம்) பிறகு இந்தியாவின் மூன்றாவது பெரிய செம்பு ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா உள்ளது.