வெள்ளை மாளிகைக்கு வரும்படி வடகொரிய அதிபருக்கு ட்ரம்ப் அழைப்பு
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வெள்ளை மாளிகைக்கு வரும்படி அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜி20 மாநாட்டிற்காக ஜப்பானுக்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அங்கிருந்து தென்கொரியா சென்றார். அங்கு அந்நாட்டு அதிபர் மூன் ஜேவை சந்தித்த ட்ரம்ப் பின்னர் அவருடன் வடகொரிய தென்கொரிய எல்லைக்கு சென்றார். எல்லையைக் கடந்து, வடகொரியா அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிக்கு சென்ற ட்ரம்ப், அதிபர் கிம் ஜாங் உன்னை சந்தித்தார்.
அமெரிக்க அதிபராக பதவியில் இருக்கும் போதே வடகொரிய எல்லைக்குட்பட்ட பகுதிக்கு சென்ற முதல் அதிபர் என்ற பெருமையை ட்ரம்ப் பெற்றுள்ளார். எல்லையைக் கடந்து இந்தப் பகுதிக்கு வருவதில் பெருமை கொள்வதாக தெரிவித்த ட்ரம்ப், ஒரே உணர்வுகள் தன்னையும் கிம்மையும் இணைப்பதாக கூறினார்.
கிம் ஜாங் உன்னை வெள்ளை மாளிகைக்கு வருகை தரும் படியும் ட்ரம்ப் அழைப்பு விடுத்தார். ட்ரம்பின் இந்தப் பயணம் இரு நாட்டு உறவில் முக்கிய மைல்கல் என கிம் ஜாங் உன் தெரிவித்தார். ஒரே நாளில் இந்தச் சந்திப்பு சாத்தியமானது குறித்தும் கிம் பெருமைபட்டார்.
அமெரிக்கா - வடகொரியா இடையே நீண்ட ஆண்டுகள் பகை இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு வரலாற்றிலேயே முதன்முறையாக அமெரிக்க அதிபர் ட்ரம்பும், வடகொரிய அதிபர் கிம்மும் சிங்கப்பூரில் சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து வியட்நாமில் இரண்டாவது சந்திப்பு நடைபெற்றது.
ஆனால் அது தோல்வியில் முடிந்தது. 1994ஆம் ஆண்டு ஜிம்மி கார்டரும், 2009ஆம் ஆண்டு பில் கிளிண்டனும் வடகொரியாவுக்கு சென்றனர். ஆனால் அப்போது இருவருமே அதிபர் பதவியில் இல்லை.