மோடியின் ஆங்கில உச்சரிப்பை கிண்டல் செய்யும் ட்ரம்ப்

மோடியின் ஆங்கில உச்சரிப்பை கிண்டல் செய்யும் ட்ரம்ப்
மோடியின் ஆங்கில உச்சரிப்பை கிண்டல் செய்யும் ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடியின் ஆங்கில உச்சரிப்பை கிண்டல் செய்து வருவதாக அமெரிக்க பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவும், இந்தியாவும் நட்பு நாடுகளாகவே சமீப காலமாக இருந்து வருகிறது. அதேபோல், அதிபர் டொனால்டு ட்ரம்பும், பிரதமர் மோடியும் நண்பர்கள் போலவே பார்க்கப்பட்டார்கள். அதிபராக ட்ரம்ப் பதவியேற்றது முதல் மோடி பலமுறை அமெரிக்கா சென்று வந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வருடம் ஜூன் மாதம், அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது அந்த நாட்டு அதிபர் ட்ரம்ப்பை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டுள்ளது குறித்து விவாதித்தார். அப்போது, “குறைந்த பலனை அளிக்கும் விஷயத்துக்காக இவ்வளவு அதிக விலையைக் கொடுக்கும் நாட்டை(அமெரிக்கா) பார்க்க முடியாது” என்று மோடி கூறினார்.

இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், அதிபர் ட்ரம்ப் பிரதமர் மோடியின் ஆங்கிலம் உச்சரிப்பதை கிண்டல் செய்து பேசிக்காட்டி வருவதாக கூறப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் மோடியின் கருத்தை  ‘அமெரிக்கா எதிலும் தனக்கு ஒரு பலனைத் தேடும் நாடு’ என்று புரிந்துகொண்ட ட்ரம்ப் பல இடங்களில் மோடி கூறிய வாக்கியத்தை இந்தியர்கள் ஆங்கிலத்தை உச்சரிக்கும் தொனியில் பேசிக்காட்டி வருகிறார் என்று வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. 

வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையின் கருத்து குறித்து  வெள்ளை மாளிகை இதுவரை விளக்கம் எதுவும் அளிக்கவில்லை. சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து ட்ரம்ப் சர்ச்சையில் சிக்கிக் கொள்வது புதிதல்ல. ஒருநாட்டு பிரதமரின் பேச்சை ட்ரம்ப்  கேலி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அமெரிக்க வாழ் இந்தியர் ராஜ கிருஷ்ணமூர்த்தி ட்ரம்ப் குறித்த செய்திக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மோடியின் பேச்சை ட்ரம்ப் கிண்டல் செய்ததாக வெளியான செய்தியை படித்து அதிர்ச்சியுற்றதாகவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com