குஜராத் கலவரத்தில் மோடிக்கு தொடர்பா?.. பிபிசி தயாரித்த ஆவணப் படம் சர்ச்சை ஆனது ஏன்?

குஜராத் கலவரத்தில் மோடிக்கு தொடர்பா?.. பிபிசி தயாரித்த ஆவணப் படம் சர்ச்சை ஆனது ஏன்?
குஜராத் கலவரத்தில் மோடிக்கு தொடர்பா?.. பிபிசி தயாரித்த ஆவணப் படம் சர்ச்சை ஆனது ஏன்?

குஜராத் கலவரம் தொடர்பாக பிபிசி தயாரித்திருந்த மோடி குறித்த ஆவணப் படத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

பிபிசி தயாரித்த ஆவணப் படம்

குஜராத் கலவரம் தொடர்பாக லண்டனை தலைமையிடமாகக் கொண்ட பிபிசி தொலைக்காட்சி வெளியிட்ட ஆவண படம் இந்திய அரசியலில் தற்போது புதிய புயலை கிளப்பி இருக்கிறது. இந்த ஆவணப் படத்துக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, ''இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நோக்கில் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தை தயாரித்த நிறுவனத்தை இது பிரதிபலிக்கிறது. ஒரு சார்பான ஆவணப்படம் இது. காலனியாதிக்க மனோபாவம் இன்னமும் தொடர்வதை இது காட்டுகிறது. இந்த ஆவணப்படம் கண்ணியமானது அல்ல'' என விமர்சித்துள்ளார்.

இந்தப் படத்துக்கு எதிர்ப்பலைகள் தொடர்ந்ததையடுத்து, யூடியூப்பில் இருந்து அந்தப் படம் அகற்றப்பட்டுள்ளது. லண்டனை தலைமையிடமாகக் கொண்ட பிபிசி தொலைக்காட்சி, ’இந்தியா: மோடி மீதான கேள்வி' (பகுதி 1) (India:The Modi Question) என்ற ஆவணப்படத்தை இரண்டு பாகங்களாகத் தயாரித்துள்ளது. இதன் முதல் பாகம் லண்டனில் ஒளிபரப்பப்பட்டதுடன், கடந்த ஜனவரி 17ஆம் தேதி யூடியூபிலும் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதன் 2ஆம் பாகம் வரும் 24ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியதால் இதுகுறித்து விவாதங்களும் எழத் தொடங்கின.

2002இல் குஜராத்தில் நடைபெற்ற கலவரம்

குஜராத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு கோத்ரா கரசேவகர்கள் சென்ற சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீவைத்து எரிக்கப்பட்டதில், 59 பேர் பலியாகினர். இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் மதக் கலவரம் மூண்ட வன்முறையில் 68 பேர் கொல்லப்பட்டனர். அப்போது குஜராத் மாநில முதல்வராக தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி இருந்தார். இந்த கலவரத்தை மையமாக கொண்டே பிபிசி கொண்டுவந்துள்ள ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்தே, இந்த ஆவண படத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதாவது அந்தப் படத்தில், குஜராத் கலவரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை மற்றும் மோடி ஆட்சியில் இந்திய முஸ்லிம்களின் நிலை குறித்து ஆவணப்படுத்தப்பட்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தப் படத்துக்கு ஆதரவு ஒருபுறமும், எதிர்ப்பு மறுபுறமும் இருந்தன.

மோடிக்கு தொடர்பில்லை; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

இந்தப் படம் குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட பிரிட்டன் எம்.பி. இம்ரான் ஹூசைன், “கோத்ரா கலவரம் என்பது இன அழிப்பு” என விமர்சித்து இருந்ததுடன் கேள்வியும் எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், “குஜராத் கலவரம் தொடர்பான இங்கிலாந்து அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. உலகின் எந்தப் பகுதியில் அநீதி நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்போம். ஆனால் ஒரு தலைவரின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துவதை ஏற்க முடியாது" என்றார்.

குஜராத் கலவரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், “குஜராத் கலவரத்துக்கும் மோடிக்கும் எந்த தொடர்பும் இல்லை” எனக் கூறி அந்த மனு, கடந்த ஆண்டு (2022) ஜூன் மாதம் 24ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com