ஆபரேஷன் தியேட்டரில் மாறிய ’தலை’: பொதுமக்கள் அதிர்ச்சி!
மருத்துவமனை மற்றும் டாக்டர் ஜோக்ஸ்களை அதிகம் வாசித்திருப்போம் பத்திரிகைகளில். அதெல்லாம், டூமச் கற்பனை நினைத்துக் கொண்டாலும் சிரித்துவிட்டு கடந்துவிடுவோம். அதிலும் ஒன்றிரண்டு சில நேரங்களில் உண்மையாகி விடுகிறது.
கென்யா தலைநகர் நைரோபியில் உள்ளது, கென்யாட்டா தேசிய மருத்துவமனை. கொஞ்சம் பெரிய மருத்துவமனையான இங்கு, மூளையில் கட்டி என்பதற்காக வந்து சேர்ந்தார் ஒருவர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், ஆபரேஷன் செய்ய முடிவு செய்தனர். இதற்காக கடந்த வாரம் ஆபரேஷன் செய்துகொள்ள தேதி குறித்தனர். சம்பந்தப்பட்ட நாள் அன்று, டாக்டர் தனது குழுவுடன் சொன்ன நேரத்துக்கு ஆபரேஷன் தியேட்டருக்கு வந்தார். அவர் வரும் முன்பே, மயக்க மருந்து கொடுக்கப்பட்டு பேஷன்ட் தயாராக வைக்கப்பட்டிருந்தார். டாக்டர், பேஷன்டின் பெயரை பார்த்தார். பிறகு ஆபரேஷனை ஆரம்பித்துவிட்டார்.
மண்டையை பிளந்து மூளையில் இருந்த கட்டியை, தேடு தேடு என்று தேடினால்... காணவில்லை. ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு,’எங்க போச்சு இந்தக் கட்டி?’ என்று சந்தேகப்பட்ட டாக்டர், நர்சுகளிடம் விசாரித்தார். பிறகுதான் வேறு பேஷன்டின் தலையை பிளந்து மூளையில் விளையாடிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. உடனடியாக, ஆபரேஷனை முடித்துவிட்டு வந்துவிட்டார்கள். அந்த பேஷன்ட்டுக்கு மூளையில் ரத்தம் உறைந்திருப்பதை ஆபரேஷன் மூலம் சரி செய்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யவில்லை. இருந்தும் அதிசயமாக அந்த பேஷன்ட் நலமாகிவிட்டார்.
மூளைக் கட்டிக்காக சேர்க்கப்பட்ட பேஷன்ட், ’எனக்கு ஆபரேஷன்னு சொன்னீங்களே ?’ என்று கேட்டுக்கொண்டிருக்க, பிறகுதான் விஷயம் வெளியே தெரிந்திருக்கிறது. இதையடுத்து டாக்டர் உட்பட நான்கு பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்த மருத்துவமனைக்கு எதிராகவும் டாக்டர்களின் கவனக்குறைவுக்காகவும் சமூக வலைத்தளங்களில் சாடி வருகிறார்கள் அந்நாட்டு மக்கள்.