‘அத தொட்ட நீ கெட்ட’ கணவர்களுக்கு கிடுக்கிப்பிடி சட்டம்!
மனைவியின் செல்போனை ரகசியமாக சோதித்துப் பார்க்கும் கணவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டையுடன் அபராதம் விதிக்கப்படும் என சவுதி அரசு புதிய சட்டத்தை இயற்றியுள்ளது.
சவுதி அரேபியாவின் புதிய இளவரசராக, முகமது பின் சல்மான் பதவியேற்ற பின், பல்வேறு சட்டத்திருத்தங்களை ஆக்கப்பூர்வமாக மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக பெண்களுக்கு உரிமை அளிக்கும் வகையில் அவர் பல புதிய சட்டங்களை கொண்டு வந்தார். இதில் ராணுவத்தில் பெண்கள் பணியாற்ற அனுமதி, பெண்கள் திரைப்படங்கள் காண அனுமதி, கார் மற்றும் பைக் ஓட்ட அனுமதி உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.
இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக தற்போது மனைவியின் செல்போனை கணவர்கள் பரிசோதிப்பது குற்றம் என்ற புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பெண்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் செல்போன் பயன்படுத்துதலைக் கொண்டு அவர்களுடன் வாதம் அல்லது சண்டையிட்டாலும் இந்தப் புதிய சட்டத்தின் படி நடவடிக்கை பாயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி குற்றம் செய்த கணவருக்கு ஓராண்டு சிறையுடன், 5 லட்சம் ரியால்ஸ் அபராதம் விதிக்கப்படும்.
இந்தச் சட்டம் தொடர்பாக விளக்கமளித்துள்ள சவுதி அரசின் அமைச்சகம், செல்போன்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக பெண்கள் எதிரான மிரட்டல், மோசடி மற்றும் அவதூறுகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அத்துடன் சவுதியில் உள்ள 25 வயதுக்கு உட்பட்டவர்களில் பாதிக்கும் மேலானோர் சமூக வலைத்தளங்களை அதிக நேரம் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது. எனவே மனைவியின் சமூக வலைத்தளத்தை கணவர் பரிசோதிப்பது, பெண்ணின் உரிமைக்கு எதிரானது என்றும், அந்த உரிமையை காக்கவே இந்தச் சட்டம் என்றும் விளக்கமளித்துள்ளது.