தடுப்பூசி விவகாரம்: நீதிமன்ற தீர்ப்பால் ஆஸ்திரேலியாவிலிருந்து வெளியேறும் நோவக் ஜோகோவிச்
தனது விசாவை ரத்து செய்யும் ஆஸ்திரேலிய நீதிமன்றத்தின் தீர்ப்பால் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், இருந்தாலும் தீர்ப்புக்கு இணங்கி நாட்டை விட்டு வெளியேறுவதாகவும் நட்சத்திர டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் தெரிவித்திருக்கிறார்.
ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத உலகின் நம்பர் ஒன் நட்சத்திர டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜோகோவிச், "நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கிறேன், நான் நாட்டை விட்டு வெளியேறுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பேன்" என்று தெரிவித்தார்.
தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஜோகோவிச்சின் 11 நாள் சட்டப் போராட்டத்தில், முதலில் ஜோகோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்டு பின்னர் மீண்டும் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட்டார். முதலில் மெல்போர்ன் தடுப்பு மையத்தில் இருந்த ஜோகோவிச் பின்னர் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளுக்காக மைதானங்களில் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.
நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் 10-வது முறையாக பட்டத்தை வெல்வார் என்ற நம்பிக்கையுடன் ஜோகோவிச் இருந்தார். டென்னிஸ் விளையாட்டு வரலாற்றில் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றிய முதல் ஆண் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் இவர்.