'தக்காளி, உருளைக்கிழங்கு விலையை தெரிந்துகொள்ள அரசியலுக்கு வரவில்லை' - இம்ரான் கான்
''தக்காளி, உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலையை தெரிந்துகொள்ள நான் அரசியலுக்கு வரவில்லை'' என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஹஃபிசாபாத் நகரில் நடைபெற்ற அரசியல் பேரணியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ''உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதன் மூலம் எனது அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சிக்கும் சக்திகளுக்கு எதிராக நாட்டு மக்கள் எனக்கு துணை நிற்பார்கள். எஞ்சியிருக்கும் எனது பதவிக்காலத்தில் பாகிஸ்தான் சிறந்த நாடாக மாறப் போகிறது. அரசாங்கம் அறிவித்துள்ள சலுகைகள் விரைவில் பலனைத் தரும்.
உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி விலையை அறிய நான் அரசியலில் சேரவில்லை. நாட்டின் இளைஞர்களுக்காக நான் அதில் இணைந்தேன். நாம் ஒரு பெரிய தேசமாக மாற விரும்பினால், நாம் உண்மையை ஆதரிக்க வேண்டும், இதைத்தான் கடந்த 25 ஆண்டுகளாக நான் கூறி வருகிறேன்'' என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: இஸ்ரேல் பிரதமரை மத்தியஸ்தம் செய்ய செலன்ஸ்கி அழைப்பு