அரசு இணையதளத்தை ஹேக் செய்த OpenAI.. விவரங்கள் திருடப்பட்டதா?
செய்தியாளர் - M.மீரா
ஆஸ்திரேலிய அரசின் சுகாதாரத் தகவல் இணையதளத்தில் OpenAI நிறுவனம் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு (AI) Agent ஒன்று அனுமதியின்றி நுழைந்து, பொதுமக்களுக்குக் கிடைக்கக்கூடிய மற்றும் பொதுவில் வெளியிடப்படாத சில கோப்புகளை அணுகியதாக அந்நாட்டு பிரதமர் ஆண்டணி அல்பனீஸ் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக தற்போது தடயவியல் விசாரணை நடைபெற்று வருகிறது.
ஜூன் மாதத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. Services Australia அமைப்பின்கீழ் செயல்படும் Medicare Statistics Reporting Service என்ற இணையதளத்தில்தான் AI Agent அனுமதியற்ற அணுகலைப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளம் Medicare தொடர்பான புள்ளிவிவரங்கள், செலவினங்கள் உள்ளிட்ட முக்கியமான புள்ளிவிவரத் தகவல்களை வழங்குகிறது.
எனினும், இதுவரை தனிநபர்களின் மருத்துவ அல்லது தனிப்பட்ட தகவல்களைத் திருட முயன்றதாக ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என அல்பனீஸ் தெரிவித்துள்ளார். Services Australia-வின் ஒட்டுமொத்த நெட்வொர்க்கிலும் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்றும் அவர் கூறினார். அதேவேளையில், நடந்த சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக OpenAI CEO சாம் ஆல்ட்மேனுடன் நேரடியாக பேசியதாக அல்பனீஸ் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து அரசுக்கு தகவல் தெரிவிக்க OpenAI எடுத்துக்கொண்ட காலதாமதம் குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதாக அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் ஜூன் மாதத்திலேயே நடந்திருந்தாலும், செப்டம்பர் 10ஆம் தேதிதான் ஆஸ்திரேலிய அரசுக்கு OpenAI தகவல் தெரிவித்ததாக அல்பனீஸ் கூறியுள்ளார். நோயாளிகளின் விவரங்கள் திருடப்பட்டனவா என்பது குறித்தும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் நிறுவனம் கூறியுள்ளது.

