ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் | அதிகாரிகளுக்கே தெரியாமல் நடந்த ரகசியம் என தகவல்!
இஸ்ரேல்-ஈரான் மோதலில் அமெரிக்கா நேரடியாக பங்கேற்பது குறித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முடிவெடுக்க இருப்பதாக அறிவித்திருந்தார் ட்ரம்ப். ஆனால் தனது தாக்குதல் திட்டத்தை ரகசியமாக வைத்திருப்பதற்காகவே ட்ரம்ப் அவ்வாறு அறிவித்ததாக வாஷிங்டன் போஸ்ட் இதழில் வெளியான செய்திக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு வார காலக்கெடுவை அறிவித்த ட்ரம்ப் அதே நேரத்தில் ஈரான் மீதான தீடீர் தாக்குதல் திட்டத்தை வெள்ளை மாளிகையின் சில முக்கிய உயர் அதிகாரிகளுடன் இணைந்து இறுதி செய்து கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.
ராணுவ அதிகாரிகளிடம் தாக்குதலுக்கு தயாராக உத்தரவிட்ட ட்ரம்ப் அதே நேரத்தில் இஸ்ரேல்-ஈரான் போர் தீவிரமடைவதைத் தடுப்பதற்கான யோசனைகளை தனது ஆலோசகர்களிடம் கேட்டுள்ளார். இந்த திடீர் நள்ளிரவுத் தாக்குதல் நடவடிக்கைக்கு ‘Operation Midnight Hammer; என்று பெயரிடப்பட்டது.
மறுபுறம், ஈரானின் அணு சக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நடவடிக்கை அமெரிக்க அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிற நாடுகள் மீதான போரை அறிவிக்கும் அதிகாரம் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு மட்டுமே உண்டு என்றும் நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் அதிபர் தன்னிச்சையாக போரை அறிவிக்க முடியாது என்றும் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் தெளிவாகக் கூறுகிறது. அதே நேரம் அமெரிக்கா மீதான திடீர் தாக்குதல்களுக்கு விரைவாகப் பதிலடி கொடுக்கும் அதிகாரமும் அதிபருக்கு வழங்குகிறது.