\
Denmark Govt plans azaan ban plans for a nationwide ban on the Islamic to prayer
denmarkx page

இஸ்லாமிய தொழுகை | ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பத் தடை.. அதிரடி காட்டிய டென்மார்க்!

கடந்த 2023-ஆம் ஆண்டு டென்மார்க்கில் குர்ஆன் போன்ற புனித நூல்கள் எரிக்கப்பட்டதால் சர்வதேச அளவில் பதற்றம் உருவானது. அதைத் தொடர்ந்து, பொது இடங்களில் புனித நூல்களை எரிப்பதற்கும் டென்மார்க் அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Published on

பொதுவெளியில் இஸ்லாமியத் தொழுகைக்கான அழைப்பை (Azan) ஒலிபெருக்கிகள் மூலம் ஒலிபரப்புவதற்கு நாடு தழுவிய அளவில் தடை விதிக்க டென்மார்க் அரசு திட்டமிட்டுள்ளது.

டென்மார்க்கின் மக்கள்தொகையில் சுமார் 5% முஸ்லிம்கள் உள்ளனர், இது அவர்களை மிகப்பெரிய சிறுபான்மை சமூகமாக ஆக்குகிறது. இந்த நிலையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பிரத்யேகமாக இயங்கிவந்த தொழுகை அறைகளை நீக்கவும், பொது இடங்களில் பெண்கள் முழுமையாக முகத்தை மூடும் புர்கா போன்ற ஆடைகளை அணியவும் டென்மார்க்கில் இஸ்லாமிய மத நடைமுறைகள் தொடர்பாக, அவ்வரசு சில கடுமையான சட்டங்களை அமல்படுத்தியுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு டென்மார்க்கில் குர்ஆன் போன்ற புனித நூல்கள் எரிக்கப்பட்டதால் சர்வதேச அளவில் பதற்றம் உருவானது. அதைத் தொடர்ந்து, பொது இடங்களில் புனித நூல்களை எரிப்பதற்கும் டென்மார்க் அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் பொதுவெளியில் இஸ்லாமியத் தொழுகைக்கான அழைப்பை (Azan) ஒலிபெருக்கிகள் மூலம் ஒலிபரப்புவதற்கு நாடு தழுவிய அளவில் தடை விதிக்க டென்மார்க் அரசு திட்டமிட்டுள்ளது. பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் (Mette Frederiksen) தலைமையிலான இடதுசாரி அரசு, கடுமையான குடியேற்றக் கொள்கைகளின் ஒரு பகுதியாக இத்திட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து டென்மார்க் குடியேற்றத் துறை அமைச்சர் மோர்டன் போட்ஸ்கோவ் (Morten Bødskov), "தொழுகைக்கான அழைப்பு டென்மார்க் நகரங்களின் கூரைகளின் மேல் கேட்கக் கூடாது. டென்மார்க்கின் பொதுவெளிகளில் நடக்கும்போது, நாம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் புறநகப் பகுதியில் இருக்கிறோமோ என்ற சந்தேகம் வரக்கூடாது" என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். டென்மார்க்கில் அதிகரித்து வரும் இஸ்லாமியமயமாக்கல், பொது இடங்களை ஆக்கிரமிப்பதாக அந்நாட்டு அரசு கருதுவதாலேயே இதற்கு தடைவிதிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அஸான் (Azan) தடைத் திட்டம் டென்மார்க்கில் புதியதல்ல. இதற்கு முன்பு 2020 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளிலும் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், டென்மார்க்கின் அரசியலமைப்புச் சட்டம் (Constitution) அங்கு வாழும் மக்களுக்கு மதச் சுதந்திரத்தையும், பொது வழிபாட்டு உரிமையையும் வழங்குகிறது. எனவே, இந்தப் புதிய தடைச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாக அமைந்துவிடக் கூடாது என்பதால், இதை எவ்வாறு சட்டப்பூர்வமாக அமல்படுத்துவது என்று அந்நாட்டு அரசு தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. மறுபுறம், கடந்த சில ஆண்டுகளாக, டென்மார்க்கில் இஸ்லாமிய வெறுப்பு என்பது ஒரு பிளவாக மாறியிருப்பதாகக் கூறப்படு்ம் நிலையில், அது பெரும்பாலும் குடியேற்றம் தொடர்பான விவாதங்கள் மற்றும் கொள்கைகளுடன் பிணைந்திருப்பது கவனிக்கத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com