சுட்டுக்கொல்லப்பட்ட அதிபர்கள் - வரலாற்றில் பாடம் கற்ற அமெரிக்கா

சுட்டுக்கொல்லப்பட்ட அதிபர்கள் - வரலாற்றில் பாடம் கற்ற அமெரிக்கா

சுட்டுக்கொல்லப்பட்ட அதிபர்கள் - வரலாற்றில் பாடம் கற்ற அமெரிக்கா
Published on

அமெரிக்காவையே மாற்றுவதற்கு சபதம் எடுத்த அதிபர் ஆப்ரஹாம் லிங்கன் 1865-ம் ஆண்டு நாடகம் பார்த்துக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். 20-வது அதிபராக இருந்த கர்ஃபீல்டு ரயில்நிலையத்தில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.

1901-ம் ஆண்டு அப்போதைய அதிபர் வில்லியம் மெக்கின்லே நியூயார்க்கின் இசைக் கோயிலுக்குச் சென்றபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகே அதிபரைப் பாதுகாக்கும் பொறுப்பு ஒரு சிறப்புப் படையிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் சீக்ரெட் ஏஜென்ட்ஸ். ரகசியப் படையினர். எப்போதும் அதிபரைச் சூழ்ந்திருக்கும் இவர்கள், அமெரிக்க அதிபர்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும்போது அவருடன் மிடுக்கான தோற்றத்தில் வலம் வருவர்.

உண்மையில் அமெரிக்காவின் ரகசியப் படை, அதிபரின் பாதுகாப்புக்காக ஏற்படுத்தப்பட்டது அல்ல. 1860-களில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது கள்ள டாலர்களின் புழக்கத்தைத் தடுப்பதற்காகவே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இது தவிர போலி ஆவணங்கள், தகவல் தொடர்பு மோசடிகள் போன்றவற்றையும் இந்த அமைப்பு கண்காணித்து வந்தது. அதிபரின் மனைவி, குழந்தைகள், மூத்த அமைச்சர்கள், முன்னாள் அதிபர்கள், அதிபர் வேட்பாளர்கள் என தற்காலத்தில் இவர்களின் பாதுகாப்புப் பொறுப்பு விரிவடைந்திருக்கிறது. இருப்பினும் அதிபரைக் காப்பதே ரகசியப் படைப் பிரிவின் முக்கியமான பணி.

அமெரிக்க அதிபரைப் பாதுகாப்பதற்காக பல நவீன ஆயுதங்கள் ரகசியப் படைப் பிரிவு வீரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறன. இவற்றில் சில ஆயுதங்களின் செயல்பாடுகள் மிக ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கின்றன. அதிபர் எங்கு சென்றாலும், அந்த இடத்துக்கு முன்கூட்டியே சென்று ஆய்வு செய்வது, நெருக்கடி ஏற்பட்டால் பயன்படுத்த வேண்டிய பாதையைத் தேர்வு செய்வது உள்ளிட்ட பல பணிகளை ரகசியப் படைப்பிரிவினர் மேற்கொள்கின்றனர்.

1950-ம் ஆண்டு வெள்ளை மாளிகையில் புதுப்பிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்ததால், அதன் அருகே இருந்த மற்றொரு இல்லத்தில் அதிபர் ட்ருமன் தங்கியிருந்தார். அப்போது ப்யூர்டோ ரிகோ விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த இருவர் அதிபரைக் கொல்லும் நோக்கில் துப்பாக்கியால் சுட்டனர். இதில் பாதுகாப்புப் பணியில் இருந்த ரகசியப் படைப் பிரிவைச் சேர்ந்த ஒரு வீரர் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இன்று வரை பாதுகாப்புப் பணியின்போது உயிரிழந்த ஒரே ரகசியப் படை வீரர் இவர்தான்.

1981-ம் ஆண்டு அதிபர் ரீகன் வாஷிங்டனில் உள்ள போர்டு அரங்குக்கு வந்தபோது, ஜான் ஹிங்லே என்பவர் சராமாரியாகச் சுட்டார். அப்போது ரகசியப் படையைச் சேர்ந்த டிம் மெக்கார்தி, தனது உயிரையும் பொருள்படுத்தாமல் குறுக்கே பாய்ந்து துப்பாக்கிக் குண்டைத் தன்மீது வாங்கிக் கொண்டார். மொத்தம் ஆறு குண்டுகள் பாய்ந்து வந்தன. அதிபர் ரீகனுக்கு நெஞ்சிலும், இடுப்புப் பகுதியிலும் குண்டுகள் பாய்ந்தன. மெர்கார்திக்கு வயிற்றில் குண்டு துளைத்தது. இருவருமே இந்தச் சம்பவத்தில் உயிர்ப்பிழைத்துக் கொண்டனர். ரகசியப் படையைச் சேர்ந்தவர்களின் துணிச்சலுக்கு இந்தச் சம்பவம் உதாரணமானது. அதிபரைப் பாதுகாப்பதற்கு இதுபோன்ற வீரர்கள் அவசியம் என்பதையும் உணர்த்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com