விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கியது டெல்லி விமானி!
இந்தோனேஷியாவில் விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய விமானி டெல்லியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
இந்தோனேஷியாவில், லயன் ஏர் என்ற விமானம் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. தலைநகர் ஜகர்தாவில் இருந்து தினமும் காலை பங்கல் பினாங்க் என்ற பகுதிக்கு இந்த நிறுவனத்தின் விமானம் இயக்கப்படுவது வழக்கம்.
வழக்கம் போல இன்று காலை 6.20 மணிக்கு, ஜேடி-610 என்ற எண் கொண்ட லயன் ஏர் விமானம் ஜகர்தாவில் இருந்து புறப்பட்டது. அதில் 8 பணிப்பெண்கள், 2 விமானிகள், 2 குழந்தைகள், ஒரு கைக்குழந்தை உட்பட 189 பேர் இருந்தனர். விமானம், 7.20 மணிக்கு பங்கல் பினாங் பகுதிக்கு சென்றடைய வேண்டும். ஆனால் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.இதனால் அந்த விமானம் என்ன ஆனது என்பது தெரியாததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. விமானம் மாயமான தகவல் தெரிய வந்ததும் அதில் பயணித்தவர்களின் உறவினர்கள் விமான நிலையத்தில் கூடினர்.
இந்நிலையில் அந்த விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது, தெரியவந்தது. அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. விமானத்தின் உடைந்த பாகங்கள் கடலில் மிதக்கின்றன. அவற்றை மீட்கும் பணி நடந்து வருகிறது. விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த விமானத்தை இயக்கிய விமானி பவ்யே சுனேஜா டெல்லியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. கிழக்கு டெல்லியில் உள்ள மயூர் விஹார் பகுதியை சேர்ந்த இவரும் துணை விமானி ஹர்வினோவும் சேர்ந்துதான் விமானத்தை இயக்கியுள்ளனர். சுனேஜா, கடந்த 2011 ஆம் ஆண்டு, லயன் ஏர் நிறுவனத்தில் விமானியாக சேர்ந்துள்ளார். இந்தியாவுக்கு வந்து பணியாற்ற விரும்பி அதற்கான முயற்சி களில் இருந்துள்ளார். அதற்குள் விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.