வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் தொடர் போராட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தினர். அப்போது, சாலைகளில் மறியலில் ஈடுபட்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், டெல்லியில் முக்கிய நுழைவு வாயில்களை கைப்பற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர். 19 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், கடந்த 8-ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். அதேபோல இரண்டு தினங்களுக்கு முன்பு டெல்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி மையங்களையும் அவர்கள் கைப்பற்றினர். இதன் தொடர்ச்சியாக, விவசாயிகளின் போராட்டம் முக்கியமாக நடைபெற்றுவரும் இடங்களான சிங்கு எல்லை, காஜிப்பூர் எல்லை, நொய்டா எல்லை என பல பகுதிகளில் நேற்று காலையிலிருந்தே உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர்.

காஜிப்பூர் எல்லைப்பகுதியில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த விவசாயிகள் திடீரென முழு சாலையையும் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு வழிச்சாலையான இதில் பாதிக்குமேல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்துவிடப்பட்ட நிலையில் முழு சாலைகளையும் திடீரென விவசாயிகள் ஆக்கிரமித்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விவசாயிகளின் இந்த ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் காலையில் இருந்து அவரது வீட்டில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். மேலும் அவர் சார்ந்த ஆம் ஆத்மி கட்சியினரும் டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஒன்றுகூடி உண்ணாவிரதத்தில் பங்கெடுத்தனர். துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையில் பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகங்கள் முற்றுகை இடப்படும் என விவசாய சங்கங்கள் அறிவித்திருந்த நிலையில் டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகம் உட்பட முக்கியமான இடங்களில் காவல்துறை பாதுகாப்பு அதிகமாக போடப்பட்டிருந்தது. உண்ணாவிரத போராட்டம் திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடத்தி முடித்ததை அடுத்து அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என விவசாய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளின் போராட்டம் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க தமிழ்நாடு, கேரளா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த சில விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரை நேரில் சந்தித்து விவசாய சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com