வங்கதேச நிலச்சரிவு பலி எண்ணிக்கை 163 ஆக அதிகரித்தது
மோரா புயலை அடுத்து ஏற்பட்ட வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 163 ஆக அதிகரித்துள்ளது.
வங்கதேசத்தில் ஒவ்வொரு வருடமும் மழை காலங்களில் பெய்யும் பருவமழையினால் புயல், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படுவதுண்டு. இந்த வருடம் வங்கதேசத்தில் மோரா புயல் தாக்கியது. இதனை அடுத்து 2 வாரத்தில் பருவமழை பொழிய தொடங்கியது.
இதில் கடந்த வார தொடக்கத்தில், தென்கிழக்கு ரங்மதி, சிட்டகாங் மற்றும் பந்தர்பன் மலை மாவட்டங்கள் கடுமையாக பாதிப்படைந்தன. கடும் மழையினால் பல்வேறு இடங்களில் நீர் உட்புகுந்தது. பல கிராமங்கள் நீரில் மூழ்கின. ரங்மதியில் 116 பேரும், சிட்டகாங்கில் 32 பேரும், பந்தர்பன்னில் 6 பேரும், காக்ஸ் பஜார் பகுதியில் 2 பேரும் மற்றும் காக்ரசாரி பகுதியில் ஒருவரும் பலியாகினர். வங்கதேசத்தில் மலை பகுதிகள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்படுகிறது. இதனால் மழை பொழியும்பொழுது அங்கு மண் அரிப்பு ஏற்பட்டு நிலச்சரிவு ஏற்பட வழிவகுக்கிறது என நிபுணர்கள் மற்றும் சுற்றுச்சூழல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், காக்ரசாரி மற்றும் மவுல்விபஜார் மாவட்டங்களில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் 3 குழந்தைகள் உள்பட 2 பேர் கொல்லப்பட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 163 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.