கவுதமாலாவில் ஏற்பட்ட எரிமலையில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சுமார் 200 பேரை காணவில் லை.
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று கவுதமாலா. மெக்ஸிகோ அருகிலுள்ள இந்த நாட்டில் பியூகோ என்ற எரிமலை ஞாயிற்றுக்கிழமை வெடித்துச் சிதறியது. இதனால் எரிமலைக் குழம்புகளும், சாம்பல் துகள்களும் ஏராளமான வீடுகளை சூழ்ந்தன. இதில் பொதுமக்கள் சிக்கிக்கொண்டனர்.
சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்குச் சாம்பல் புகை பரவியது. இதில் பலர் பலியாயினர். சாம்பல் புகை காரணமாக கவுதமாலா சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது. இந்தப் பகுதியை சுற்றி வசித்தஆயிரக்கணக்கானோர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில் நேற்று வரை 69 பேர் பலியானதாகக் கூறப்பட்டது. இப்போது 99 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 200 பேரை காணவில்லை. அவர்களைத் தேடும் பணி நடந்துவருகிறது. இந்த எரிமலை காரணமாக மேலும் பலர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.