\
Cyclosporiasis outbreak hitting more than half of US
Cyclosporiasis x page

அமெரிக்காவை அலறவிடும் ஒட்டுண்ணி பாதிப்பு.. Cyclosporiasis என்றால் என்ன? அறிகுறிகள் யாவை?

காய்கறிகளை நன்றாகச் சமைத்து உண்பதன் மூலமே இந்த ஒட்டுண்ணியை முழுமையாக அழிக்க முடியும்.
Published on

அமெரிக்காவில் பொதுவாக கோடைக் காலங்களில் சைக்ளோஸ்போரா (Cyclospora) என்ற ஒட்டுண்ணி பரவல் அதிகமாகக் காணப்படும். அந்தவகையில், அமெரிக்காவின் 31 மாகாணங்களில் இந்த ஒட்டுண்ணிப் பாதிப்பு மிக வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, மிக்சிகன் மாகாணம் அதிக பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.

சைக்ளோஸ்போரா கேயடனென்சிஸ் (Cyclospora cayetanensis) என்பது மனிதர்களின் குடலைப் பாதித்து கடுமையான வயிற்றுப்போக்கை (சைக்ளோஸ்போரியாசிஸ் - Cyclosporiasis) ஏற்படுத்தும் ஒரு நுண்ணிய ஒட்டுண்ணி ஆகும். அமெரிக்காவில் பொதுவாக கோடைக் காலங்களில் (மே முதல் ஆகஸ்ட் வரை) இந்த ஒட்டுண்ணிப் பரவல் அதிகமாகக் காணப்படும்.

அந்தவகையில், இந்த ஒட்டுண்ணிப் பாதிப்பு மிக வேகமாகப் பரவி வருகிறது. அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (CDC) புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்காவில் மொத்தம் 31 மாகாணங்கள் இந்த ஒட்டுண்ணிப் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. குறிப்பாக, மிக்சிகன் மாகாணம் அதிக பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. அதேபோல், நியூயார்க் மாகாணமும் இந்த வருடம், இரண்டு மடங்கு பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளது. மேலும், பல மாகாணங்களில் இந்தப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை, 3,000 வழக்குகள் பதிவாகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், மிக்சிகனில் மட்டும் 1,500 மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

இந்த ஒட்டுண்ணி, ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு நேரடியாக பரவாது. சமைக்காமல் பச்சையாக உண்ணப்படும் காய்கறிகள் மற்றும் பழங்கள் மூலமாகவே இது பெரும்பாலும் பரவுகிறது. பெரும்பாலும் அசுத்தமான பழங்கள் (ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி), காய்கறிகள் மற்றும் மூலிகைகள் (புதினா, கொத்தமல்லி) மூலமாகவே இது பரவுகிறது.

இந்த ஒட்டுண்ணிகள் பழங்கள் மற்றும் காய்கறிகளின் மேற்புறத்தில் ஒட்டிக்கொள்வதால், சாதாரணத் தண்ணீரைக் கொண்டு எளிதில் கழுவி அவற்றை அகற்ற முடியாது. காய்கறிகளை நன்றாகச் சமைத்து உண்பதன் மூலமே இந்த ஒட்டுண்ணியை முழுமையாக அழிக்க முடியும். இந்த ஒட்டுண்ணி பாதிப்பால், நீர் போன்ற கடுமையான வயிற்றுப்போக்கு, கடுமையான வயிற்று வலி, உடல் சோர்வு, குமட்டல், காய்ச்சல் மற்றும் பசியின்மை ஏற்படலாம். இந்த அறிகுறிகள் சில நாட்கள் முதல் சில வாரங்கள் வரை நீடிக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com