”ரத்தக்களரி ஏற்படும்” - அமெரிக்காவுக்கு கியூபா எச்சரிக்கை!
வெனிசுலாவின் எரிவாயு நிறுத்தம், அமெரிக்காவின் தடைகள் காரணமாக கியூபாவில் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் நீண்ட மின்வெட்டு ஏற்பட்டிருக்கிறது. இதனால், ஹவானாவில் போராட்டங்கள் வெடித்துள்ளன. ட்ரம்ப் நிர்வாகம் கியூப கம்யூனிச ஆட்சியை கவிழ்க்க முயல்கிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்த எரிசக்தி நெருக்கடி மூலம் அதிபர் மிகுவல் தியாஸ்-கானெலை பதவி விலகச் செய்வதே அமெரிக்காவின் நோக்கம் என கியூபா கூறுகிறது.
வெனிசுலாவும் கியூபாவும் நெருங்கிய உறவுகளைப் பேணிவந்த நிலையில், கியூபாவின் எரிவாயு தேவையை வெனிசுலாவே பூர்த்தி செய்துவந்தது. ஆனால், வெனிசுலா அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்கு வந்த பின்னர், கியூபா நாடு தழுவிய எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொண்டதால் பெரும் மற்றும் நீண்டகால மின்வெட்டுகளுக்கு வழிவகுத்ததோடு, ஹவானாவில் பொதுப் போராட்டங்களையும் தூண்டியது. அதேசமயம், அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப், கியூபாவிற்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் எந்தவொரு நாட்டின் மீதும் வரிகள் மற்றும் தடைகளை விதிப்பதாக அச்சுறுத்தி, கடுமையான பொருளாதார அழுத்தத்தை விதித்திருக்கிறார்.
இந்தசூழலில் தான், வெனிசுலாவைப் போலவே கியூபாவில் இருக்கும் கம்யூனிச அரசாங்கத்தை கவிழ்ப்பதை நோக்கமாகக் கொண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் செயல்பட்டு வருவதாக கியூபா குற்றஞ்சாட்டி வருகிறது. கியூப அதிபர் மிகுவல் தியாஸ்-கானெல் (Miguel Díaz-Canel) பதவி விலகும்படி கட்டாயப்படுத்துவதே இந்த எரிசக்தி நெருக்கடியின் நோக்கம் என்று அமெரிக்கா வெளிப்படையாகக் கூறியிருந்தது.
இதற்கிடையில், ரஷ்யா மற்றும் ஈரானிடமிருந்து 300-க்கும் மேற்பட்ட ராணுவ ட்ரோன்களை கியூபா பெற்றுள்ளதாகவும், அவற்றை கிழக்கு கியூபாவில் உள்ள குவாண்டநாமோ வளைகுடாவில் அமைந்துள்ள அமெரிக்கத் தளம், அமெரிக்க இராணுவக் கப்பல்கள் மற்றும் புளோரிடா மீதும் ட்ரோன் தாக்குதல்களை நடத்துவது குறித்து கியூபா பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது என அமெரிக்க செய்தி நிறுவனமான ஆக்சியோஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
இந்த செய்தி குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கியூப அதிபர் மிகுவல் தியாஸ்-கானெல், அமெரிக்காவுக்கோ அல்லது வேறந்த நாட்டுக்கோ கியூபா அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயல்படவில்லை எனவும், ஒரு இராணுவத் தாக்குதலுக்கு எதிராகத் தங்களைத் தற்காத்துக் கொள்ள கியூபாவிற்கு முழுமையான மற்றும் நியாயமான உரிமை உண்டு என்று கூறியுள்ளார். தொடர்ந்து, அமெரிக்கா கியூபாவை ஆக்கிரமிக்க முயன்றால், வியட்நாம் போர் பாணியில் கியூப மக்கள் ஆயுதம் ஏந்தி கொரில்லா முறையில் இறுதிவரை போரிடுவார்கள் என்றும், அது ஒரு பெரிய ரத்தக்களரியாக மாறும் என்றும் அந்நாட்டு அதிபர் எச்சரித்திருக்கிறார்.
அதேபோல, கியூப வெளியுறவுத்துறை அமைச்சர் புருனோ டோட்ரிக்ஸ், அமெரிக்கா தங்கள் மீது ராணுவத் தாக்குதல் நடத்துவதற்காக ஒரு "போலியான மற்றும் திட்டமிடப்பட்ட காரணத்தை" உருவாக்குவதாக தெரிவித்துள்ளார்.
ஈரான் அமெரிக்கா இடையேயான போர் தற்காலிகமாக் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் கியூபா இடையேயான போர் பதற்றம் தற்காலத்தில் அதிகரித்திருப்பதாக பார்க்கப்படுகிறது.

