சந்தேகப்படும் அமெரிக்கா: உறவை மேம்படுத்த கியூபா முயற்சி
அமெரிக்கா, கியூபா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், கியூபா வெளியுறவுத் துறை அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் வாஷிங்டன் சென்றுள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா மேற்கொண்ட முயற்சியால், கியூபா உடன் நீடித்து வந்த பகைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அத்துடன் நல்லுறவை பேணும் வகையில், கியூபாவில் அமெரிக்க தூதரகமும் திறக்கப்பட்டது. அண்மை காலமாக அந்த தூதரகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் அனைவரும் காது கேளாமை மற்றும் குமட்டலால் அவதிப்பட்டு வருகின்றனர். மூளை நரம்புகளை பாதிக்கக் கூடிய கருவிகளை தூதரகத்தில் ரகசியமாக பொருத்தி வைத்திருந்ததே இதற்கு காரணம் என தெரியவந்தது. இதையடுத்து கியூபா மீது சந்தேகமடைந்த அமெரிக்கா, அந்த தூதரகத்தை மூடப் போவதாக அறிவித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கியூபா இந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்து வருகிறது. மேலும் இது தொடர்பான விசாரணைக்கும் அமெரிக்கா ஒத்துழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது. இத்தகைய பதற்றமான சூழ்நிலையில் கியூபாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் புருனோ வாஷிங்டன் வந்தடைந்துள்ளார். அவர் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனை சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.