புதிதாக 20 ஆயிரம் பேருக்கு வேலை ! - அதிரடியாக அறிவித்த காக்னிசன்ட் நிறுவனம்
அடுத்த நிதியாண்டுக்குள் புதிதாக 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று காக்னிசன்ட் நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரி பிரயன் ஹம்பைர்ஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசால் உலகப் பொருளாதாரமே ஊசலாடிக் கொண்டு இருக்கிறது. இதற்கு வல்லரசு நாடான அமெரிக்காவும் விதிவிலக்கல்ல. கொரோனா பாதிப்பு காரணமாக ஏராளமானோர் அங்கு வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இந்தப் பாதிப்பு இந்தியாவிலும் தொடர்கிறது. இந்தியாவில் சில முன்னணி நிறுவனங்கள் இந்தாண்டு வெளியிட இருந்த சம்பள உயர்வுகளை நிறுத்தி வைத்துள்ளது.
மேலும், ஊழியர்களின் சம்பளங்களையும் சில சதவிகிதம் குறைத்துள்ளது. சில ஐடி நிறுவனங்கள் இன்னும் ஓர் ஆண்டுக்குச் சம்பள உயர்வு, பதவி உயர்வுகளை எதிர்பார்க்காதீர்கள் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் ஐடி நிறுவனமான காக்னிசன்ட் நிறுவனமும் கொரோனாவால் பொருளாதார பாதிப்பைச் சந்தித்துள்ளது. அதனால் வருவாய் குறைந்திருக்கும் நிலையில் தனது செலவுகளைக் குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் மார்ச் மாதத்தில் தொழில்நுட்பச் சேவைகள் பாதிக்கப்பட்ட நிலையில், ஜனவரி - மார்ச் காலாண்டுக்கான வருவாய் விவரங்களை காக்னிசன்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி - மார்ச் மாதங்களில் 3.5 சதவீதம் கூடுதலான அளவில் 4.2 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது.
இது குறித்துப் பேட்டியளித்துள்ள அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பிரயன் ஹம்பைர்ஸ் " ஜனவரி - மார்ச் காலாண்டில் காக்னிசன்ட் நிறுவனத்தின் வருவாய் அதிகரித்திருந்தாலும் ஏப்ரல் - ஜூன் காலாண்டிலும் அடுத்து வரும் காலத்திலும் கொரோனாவால் அதிக இழப்புகள் ஏற்படும். எனவே வருவாய் குறையும் சூழல் இருப்பதால் நிறுவனத்தின் செலவுகளைக் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் போக்குவரத்துப் பயணம், சந்தைப்படுத்துதல், தங்குமிடம், மின்சாரம், பொழுதுபோக்கு, ஊடகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நிறுவனத்தின் செலவுகள் குறைக்கப்படும்" என்றார்.
மேலும் தொடர்ந்த அவர் " இவ்வாறு செலவுகள் குறைக்கப்பட்டாலும், திறன் மேம்பாடு, புதிய வேலைவாய்ப்புகள் போன்றவற்றில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும். புதிதாக 20,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கத் திட்டமிட்டிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.