100 டாலரைத் தாண்டிய கச்சா எண்ணெய் விலை.. இந்தியப் பொருளாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தல்!!
மேற்கு ஆசியாவில் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தீவிரமடைந்துள்ள மோதல்கள், கச்சா எண்ணெய் கப்பல்கள் மற்றும் உற்பத்தித் தளங்கள் மீதான தாக்குதல்கள், உலக அளவிலான எண்ணெய் விநியோகத்தைப் பெருமளவில் பாதித்துள்ளன. குறிப்பாக, உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் 20 சதவீதப் பங்கைக் கொண்ட ‘ஹார்முஸ் நீரிணை’ வழியிலான கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
மேலும், சீனாவின் கச்சா எண்ணெய் பயன்பாடு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதும், பல நாடுகள் தங்களின் கையிருப்பை பயன்படுத்திவிட்டு மீண்டும் கச்சா எண்ணெய் வாங்க சந்தைக்கு வந்திருப்பதும் சர்வதேசச் சந்தையில் கடுமையான தேவையை உருவாக்கியுள்ளது. இந்த அதிவேக விலை உயர்வு, தனது கச்சா எண்ணெய் தேவையில் 88 சதவீதத்திற்கும் மேல் இறக்குமதியை நம்பியிருக்கும் இந்தியாவிற்குப் பெரும் பின்னடைவாகும். கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு ஒரு டாலர் உயரும் போது, இந்தியாவின் வருடாந்திர இறக்குமதிச் செலவு சுமார் 2 பில்லியன் டாலர் வரை அதிகரிக்கிறது.
தற்போதைய நிலையில், நாட்டின் இறக்குமதிச் செலவு 200 பில்லியன் டாலரைத் தாண்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய ரூபாய் மதிப்பு சரிவதோடு, வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்கக்கூடும். அதுமட்டுமின்றி, உள்நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து, பணவீக்கம் மீண்டும் கட்டுக்கடங்காமல் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
