ஜீரோ டாலருக்கும் கீழ்.... - அமெரிக்காவில் வரலாறு காணாத சரிவில் கச்சா எண்ணெய் விலை..!
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் குறைந்து மைனஸ் 37.63 டாலர் என்ற எதிர்மறை நிலையை எட்டியிருக்கிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வரலாறு காணாத வகையில் குறைந்து மைனஸ் 37.63 டாலர் என்ற எதிர்மறை நிலையை எட்டியுள்ளது. அமெரிக்க முன்பேர சந்தையில் திங்கள் கிழமை வர்த்தக முடிவில் மே மாதத்திற்கான WTI வகை கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 306 % குறைந்து மைனஸ் 37.63 டாலராக விற்பனையானது.
அமெரிக்காவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் அங்கு பெட்ரோலிய பொருட்களின் தேவை கடுமையாக குறைந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் சேமித்து வைக்கும் இடங்கள் வேகமாக
நிரம்பி இனி இடமே இல்லை என்ற நிலை ஏற்பட உள்ளது. இதன் எதிரொலியாகவே அதன் விலை முதல் முறையாக எதிர்மறை அளவில் குறைந்துள்ளது. இதனால் உற்பத்தியாளர்கள் கச்சா
எண்ணெயுடன் பணத்தையும் கொடுத்து அதை வாங்கிக் கொள்ளச் சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை வரும் நாட்களில் மேலும் குறையும் என சந்தை ஆய்வு
நிறுவனங்கள் கணித்துள்ளன. இதற்கிடையில் யுக்தி ரீதியான கையிருப்பாக ஏழரை கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை இருப்பு வைக்க போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க போவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியா உள்ளிட்ட நாடுகள் வாங்கும் பிரென்ட் வகை கச்சா எண்ணெய் விலை
9% குறைந்து 25.57 டாலராக உள்ளது. கச்சா எண்ணெய் கிடங்குகள் நிரம்பிவிட்டதால் சர்வதேச அளவில் வர்த்தகர்கள் கப்பல் டேங்க்கர்களில் அவற்றை இருப்புவைக்க தொடங்கியுள்ளனர்.