\
Cricket Pitch-Sized New Dinosaur Discovered! An Unbelievable Surprise!
DINOSOURX page

கிரிக்கெட் மைதானத்தின் அளவுக்கு புதிய டைனோசர் கண்டுபிடிப்பு.. நம்பமுடியாத ஆச்சர்யம்!

இந்த டைனோசரின் மிக முக்கியமான சிறப்பம்சம் அதன் மிகவும் நீண்ட கழுத்துதான். இதன் உடல் நீளம் சுமார் 20 மீட்டர் வரை இருந்திருக்கலாம். இது ஒரு கிரிக்கெட் மைதானத்தின் நீளத்துக்கு ஒப்பான அளவாகும்.
Published on

ஒரு பெரிய size யானையை பார்த்தாலே இவ்ளோ பெரிய உருவமான்னு ஆச்சர்யப்படுறோம். ஆனால், ஒரு கிரிக்கெட் மைதானம் அளவுக்கு பிரமாண்டமான ராட்சச ஜீவராசி இந்த உலகத்துல இருந்திருக்கிறதென்றால். பிரமிப்பாகத்தான் இருக்கிறது. உண்மைதான் வாருங்கள் அதுகுறித்து பார்க்கலாம்.

செய்தியாளர் : ஜே. சி. ஐடா அருட்செல்வி

தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கலாசின் மாகாணத்தில் கண்டெடுக்கப்பட்ட புதைபடிவங்களை ஆய்வு செய்த பழங்கால உயிரியல் ஆராய்ச்சியாளர்கள், இதுவரை அறியப்படாத புதிய டைனோசர் இனத்தைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

தாவரங்களை உணவாகக் கொண்ட இந்த டைனோசருக்கு ’உராகசாரஸ் கலாசினென்சிஸ்’ (Uragasaurus kalasinensis) என்று பெயரிடப்பட்டுள்ளது. சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது ஜுராசிக் காலத்தின் இறுதிப் பகுதியில் இந்த உயிரினம் வாழ்ந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த டைனோசரின் மிக முக்கியமான சிறப்பம்சம், அதன் மிகவும் நீண்ட கழுத்துதான். இதன் உடல் நீளம் சுமார் 20 மீட்டர் வரை இருந்திருக்கலாம். இது ஒரு கிரிக்கெட் மைதானத்தின் நீளத்துக்கு ஒப்பான அளவாகும். இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரும், தாய்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் அபிரத் நில்பனபன் (Dr. Apirat Nilphanaphan), ”இந்தப் புதைபடிவம் 2008ஆம் ஆண்டு முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட பகுதியிலிருந்து கிடைத்த மிகப்பெரிய புதைபடிவத் தொகுப்பின் ஒரு பகுதி” என்று தெரிவித்தார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் பாம்பின் செதில்களைப் போன்ற தோற்றமுடைய சில கற்களைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து அந்த இடம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.

'பூ நோய்' (Phu Noi) எனப்படும் அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில், ஜுராசிக் காலத்தைச் சேர்ந்த ஏராளமான புதைபடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன. அங்கு தோண்டி எடுக்கப்பட்ட புதைபடிவங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவை டைனோசர்களின் எலும்புத் துண்டுகளாக இருந்தன. மேலும், டைனோசர்களின் பற்கள் மற்றும் பல்வேறு எலும்புகளும் ஆராய்ச்சியாளர்களால் மீட்கப்பட்டன.

புதிய டைனோசர் இனத்தை அடையாளம் காண முக்கியக் காரணமாக அமைந்தது, அதன் முதுகுப் பகுதியில் உள்ள முதுகெலும்பு (Dorsal Vertebra) புதைபடிவமாகும். அந்த எலும்பில் காணப்பட்ட தனித்துவமான அமைப்புகள், இந்தப் புதிய இனத்தைச் சேர்ந்தது என்பதை ஆராய்ச்சியாளர்களுக்கு உணர்த்தின.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட சி.டி. (CT) ஸ்கேன் ஆய்வில், இந்த டைனோசர் மிகவும் நீண்ட கழுத்தைக் கொண்ட மமென்சிசாரிடே (Mamenchisauridae) என்ற சௌரோபோட் (Sauropod) குடும்பத்தைச் சேர்ந்தது என்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நீண்ட கழுத்து, பல்வேறு உயரங்களில் உள்ள தாவரங்களை எளிதாக உணவாகப் பெறுவதற்கு உதவியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com