இங்கிலாந்தைச் சேர்ந்த டாம் சில்வஸ்டர் மற்றும் ஜூலி பரூம் தம்பதியினர், அண்டார்டிகாவில் திருமணம் செய்துகொண்டனர்.
இதன்மூலம் பனிசூழ்ந்த அண்டார்டிகாவில் திருமணம் செய்துகொண்ட முதல் தம்பதி என்ற பெருமையை அவர்கள் பெற்றனர். இங்கிலாந்தில் ஷெஃப்பீல்டு பகுதியைச் சேர்ந்த டாம் சில்வஸ்டரும், அவரது காதலியான ஜூலி பரூமும், வித்தியாசமான இடத்தில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். இதற்காக அண்டார்டிகாவைத் தேர்வு செய்த அந்த ஜோடி, இங்கிலாந்து அரசிடம் சிறப்பு அனுமதிக்கு விண்ணப்பித்தனர். அரசு அனுமதி அளித்ததையடுத்து அண்டார்டிகாவில் இங்கிலாந்து ஆய்வுப் பகுதியான ரோதேரா ஆய்வுநிலையம் அமைந்துள்ள பகுதியில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களது திருமணத்தில் அண்டார்டிகா கண்டத்துக்கு சுற்றுலா சென்ற 20 ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.