மகளிர் உலகக் கோப்பை போட்டியை நேரில் பார்த்தவருக்கு கொரோனா: அச்சத்தில் 80 ஆயிரம் பேர்..!
மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி பார்வையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் அனைவரையும் ஈர்த்த ஒரு கிரிக்கெட் தொடராக அண்மையில் நடந்து முடிந்த மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை அமைந்தது. இந்தத் தொடரில் அனைத்து அணிகளையும் வீழ்த்தி இறுதிப் போட்டி வரை இந்திய அணி சென்றது. ஆனால் மார்ச் 8ஆம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டி என்பதால் இந்திய அணியை ஆஸ்திரேலிய அணி எளிதாக வீழ்த்தியது.
ஆஸ்திரேலியாவின் மெர்ல்போன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இப்போட்டியைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் வந்திருந்தனர். சுமார் 86,174 பேர் மைதானத்தில் பார்வையாளர்களாக இருந்ததாக கூறப்படுகிறது. மைதானத்தில் ஒவ்வொரு விக்கெட்டிற்கும், சிக்சருக்கும் இரு அணியின் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தோல்வியோ, வெற்றியோ போட்டியை பார்த்த உற்சாகத்துடன் இரு அணி வீரர்களும், பார்க்க வந்த ரசிகர்களும் வீடு திரும்பியிருந்தனர்.
இந்நிலையில், அவர்களுக்கு வருத்தம் அளிக்கும் வகையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. மகளிர் உலகக் கோப்பையை பார்த்த பார்வையாளரில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது என்ற செய்தி தான் அது. இருக்கை எண் N42-ல் இருந்த பார்வையாளருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் பலருக்கு தொற்று இருக்க வாய்ப்பிருப்பதாகவும், அங்கே வந்தவர்களுக்கு பரவியிருக்க வாய்ப்புண்டு எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்தப் போட்டியை பார்வையிட்டவர்கள் மருத்துவப் பரிசோதனை மெற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையில்தான், கொரோனா அச்சம் காரணமாக இம்மாதம் மார்ச் 29 ஆம் தேதி தொடங்கவுள்ள ஐபிஎல் தொடரை நடத்தலாமா வேண்டாமா என்ற விவாதம் எழுந்துள்ளது. ஐஎஸ்எல் கால்பந்து இறுதிப் போட்டி பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறவுள்ளது.

