கொரனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் 80 பேர் உயிரிழப்பு
உலகையே அச்சுறுத்தி வரும் கொரனா வைரஸ் காரணமாக சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் பாம்பு உணவகத்திலிருந்து பரவியதாக கூறப்படும் கொரனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனாவின் வுகான் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதல் அச்சுறுத்தி வரும் நிலையில், மேலும் 16 நகரங்களில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
கொரனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 80 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 49 பேர் உடல்நிலை தேறியதால், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். அதேநேரத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள இரண்டாயிரத்து 744 பேரில், 324 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
சீனாவைத் தொடர்ந்து ஹாங்காங், ஆஸ்திரேலியா, மலேசியா, தாய்லாந்து, பிரான்ஸ், ஜப்பான், தைவான், வியட்நாம், சிங்கப்பூர், தென் கொரியா, மாகோ, நேபாளம், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் கொரனா வைரஸ் பரவியுள்ளது. இதனிடையே வுகான் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்து வெளியேறுமாறு தனது அதிகாரிகளை அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.