2 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள்: நடுங்க வைக்கும் கொரோனா!

2 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள்: நடுங்க வைக்கும் கொரோனா!
2 ஆயிரத்தை தாண்டிய உயிரிழப்புகள்:  நடுங்க வைக்கும் கொரோனா!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,004 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பல இந்தியர்களை அழைத்து வருவதற்காக மிகப்பெரிய விமானத்தை மத்திய அரசு நாளை அனுப்பி வைக்கவுள்ளது.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் 50 நாட்களுக்கு முன் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்று உலகையே மிரட்டும் கொடூரமாக மாறியுள்ளது. சீனா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளுக்குப் பரவியுள்ள இந்த வைரஸ் நோய்க்கு இதுவரை முழுமையாக மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,004 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 136 பேர் உயிரிழந்தாகவும், 1749 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 74,185 ஆக அதிகரித்துள்ளது‌ . சீனாவைத் தவிர்த்து, ஜப்பான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், தைவான் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளிலும் கொரோனா பரவியுள்ளது

கொரோனா வைரஸால் சீன மக்கள் மட்டுமின்றி உலக நாடுகளும் அச்சத்தில் உறைந்துள்ளன. சீனாவிலிருந்து வரும் மக்களுக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் தடை விதித்துள்ளன. சீனாவிலிருந்து முன்னதாக வந்த இந்தியர்கள் பலரையும் தீவிர சிகிச்சையில் இந்திய சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது.

இதற்கிடையே சீனாவின் வுஹான் நகரில் இருந்து மேலும் பல இந்தியர்களை அழைத்து வருவதற்காக மிகப்பெரிய விமானத்தை மத்திய அரசு நாளை அனுப்பி வைக்கவுள்ளது. சீனா செல்ல உள்ள இந்திய விமானப்படையின் சி-17 ரக விமானத்தில் மருந்துகளும் எடுத்துச் செல்லப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஏற்கெனவே மத்திய அரசு அனுப்பி வைத்த இரு விமானங்கள் மூலம் வுஹானில் இருந்து 640 இந்தியர்கள் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். இந்தச் சூழலில் வுஹானில் இருந்து மேலும் பல இந்தியர்களை அழைத்து வருவதற்காக நாளை மிகப் பெரிய விமானம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com