கொரோனாவால் முடங்கிய சீனா: உயிரிழந்தோர் எண்ணிக்கை 1110 ஆக அதிகரிப்பு
சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1110 ஆக அதிகரித்துள்ளது
சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1110 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆட்கொல்லி வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் 44653 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனையிலிருந்து இதுவரை சிகிச்சை முடிந்து 2,639 பேர் வீடு திரும்பியுள்ளனர். கடந்த 2002 ஆம் ஆண்டில் சார்ஸ் வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கையைவிட, கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக, உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
இந்நிலையில் உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடந்த மாநாட்டில் பங்கேற்று பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், கொரோனா வைரஸ் பரவல் தற்போது 99% சீனாவுக்குள் மட்டுமே முடங்கியுள்ளது என்றும், உலகின் பிற நாடுகளுக்குப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது என்றும் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் கொரோனா வைரஸுக்கு 'கொவைட்-19' எனப் பெயர் சூட்டப்பட்டது.