கொரோனா அரக்கனை விரட்டி விட்டே வீடுவருவேன் மகளே..! செவிலியர் தாயின் நெகிழ்ச்சி
சீனாவில் கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் செவிலியர் ஒருவருக்கு, அவரது குழந்தை உணவு கொண்டு வந்து கொடுக்கும் போது நிகழ்ந்த நெகிழ்ச்சி தருணத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 560ஆக அதிரித்துள்ளது. வுஹான், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட ஹூபெய் மாகாணத்தில் உள்ள ஜிம் மற்றும் கண்காட்சி அரங்கங்கள் அனைத்தும் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. நகரில் உள்ள தன்னார்வலர்களும் இணைந்து இரவு பகல் பாராமல் இந்த பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், சீனாவின் ஹெணான் மாகாணத்தில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் மனதை உருக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் செவிலியர் ஒருவருக்கு, அவரது குழந்தை உணவு கொண்டு வந்து கொடுக்கும் போது நிகழ்ந்த நெகிழ்ச்சி தருணம் காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
அந்த வீடியோவில், தன்னை பிரிந்து வாடுவதாக கண்ணீர் மல்க கூறும் தன் குழந்தையிடம், கொரோனா வைரஸ் உருவில் உள்ள அரக்கனிடம் போராடி வருவதாக அந்த செவிலியர் கூறுகிறார். வைரஸ் முழுவதும் விரட்டி அடிக்கப்பட்ட பின்னரே வீட்டிற்கு வருவேன் என்றும் அந்த செவிலியர் தனது மகளுக்கு தூரத்தில் இருந்து அரவணைத்தவாறே ஆறுதல் கூறி அனுப்பி வைக்கிறார்.
அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கொரோனாவின் கொடுமையை இந்த வீடியோ விளக்குவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.