அதிகரிக்கும் கொரோனா தொற்று.. உலக சுகாதார நிறுவனத்தின் புதிய எச்சரிக்கை
சமீபத்தில் செய்யப்பட்ட பகுப்பாய்வில் குழந்தைகளும் இளம் வயதினரும் அதிக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. அவர்கள் மூலம் பரவல் அதிகரித்து வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. ஊரடங்கு நாட்களுக்குப் பிறகு இளைஞர்களிடம் பெருகியுள்ள ஆபத்தான நடத்தைகளே காரணம் என்றும் கூறப்படுகிறது.
உலக அளவில் 20 முதல் 40 வயதினருக்கு கொரோனா பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் தங்கள் மூலம் தொற்று பரவுவதை அவர்கள் அறியாமல் இருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது. ஏனெனில், இளம் வயதினருக்கு நோய் அறிகுறிகள் தெரிவதில்லை. அதனால் எளிதாக மற்றவர்களுக்குப் பரவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
"மிகவும் பாதிக்கப்படக்கூடிய மனிதர்கள், முதியோர்கள், நீண்ட நாள் நோயுள்ளவர்கள், மக்கள் நெருக்கம் அதிகமுள்ள நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வசிப்பவர்களிடம் நோய் பரவல் அதிகரித்துவருகிறது" என்று உலக சுகாதார அமைப்பு கவலையுடன் கூறியுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அறுபது லட்சம் நோயாளிகள் பற்றிய புள்ளிவிவரங்களின் அடிப்படையில், குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறியப்பட்டுள்ளது. நான்கு வயது வரை உள்ளவர்கள் 0.3 சதவீதம் முதல் 2.2. சதவீதம், 5 முதல் 14 வயதுள்ளவர்கள் 0.8. சதவீதம் முதல் 4.6 சதவீதம் மற்றும் 15 வயது முதல் 24 வரையில் 4.5 முதல் 15 சதவீதம் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.