தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்: 200 பேர் உயிரிழப்பு; 450 கட்டடங்கள் சேதம்
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்தினர் இடையேயான மோதல் ஒரு வாரத்தைக் கடந்தும் நீடித்து வரும் மோதலில் இதுவரை 200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
செவ்வாயன்று ஹமாஸ் இயக்கத்தினரின் ஏவுகணை வீச்சில் இஸ்ரேல் பகுதியில் இரு தாய்லாந்து தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் விமானத் தாக்குதல்களில் இதுவரை, காஸாவில் உள்ள 6 மருத்துவமனைகள், 9 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்பட 450-க்கும் அதிகமான கட்டடங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலின் குண்டு வீச்சு காரணமாக காஸாவில் 217 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அப்பகுதி சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை வீச்சில் இஸ்ரேல் பகுதியில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இதனிடையே இருதரப்பு மோதலை முடிவுக்கு கொண்டு வர ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது. உடனடியாக சண்டை நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என பல சர்வதேச நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.
அப்பாவி மக்கள் உயிரிழப்பைத் தவிர்க்கும் பொருட்டு இருதரப்பு மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என ஜெர்மனியும் வலியுறுத்தியுள்ளது. சண்டை நிறுத்தத்தை கொண்டு வரும் பொருட்டு எகிப்து மற்றும் ஐ.நா. பிரதிநிதிகள் இருதரப்பினரிடமும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.