பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை!

பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை!

பீட்டாவை மீறி ஸ்பெயினில் தொடரும் காளைச்சண்டை!

ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் போர்ச்சுகல் போன்ற நாடுகளில் நடக்கும் வீர விளையாட்டுகளில் முக்கியமானது காளைச் சண்டை. ஒரே நேரத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காளைகளுடன் வீரர்களும் மோதும் விளையாட்டு இது. ஸ்பெயினின் பெரும்பாலான பிராந்தியங்கள் இதைச் சட்டபூர்வமாகவே அனுமதித்திருக்கின்றன. பண்பாட்டு ரீதியிலும், மரபு வழியாகவும் மிக முக்கியமான விளையாட்டாக காளைச் சண்டை கருதப்படுகிறது. தேசிய அடையாளமாகவும் ஸ்பெயின் நாட்டு மக்கள் இதனைக் கொண்டாடுகிறார்கள். காளைச் சண்டையில் மோதுவதற்காகவே காளைகள் பிரத்யேகமாக வளர்க்கப்படுகின்றன. இவற்றின் எடை 400 கிலோவில் இருந்து 600 கிலோ வரை இருக்கும். அதேபோல், காளைச் சண்டையில் பங்கேற்பதற்காகவே வீரர்களும் பிரத்யேகமாகப் பயிற்சி பெறுகிறார்கள். இவர்களை டோரியோ என்று அழைக்கிறார்கள்.

ஸ்பானிய மொழியில் டோரியோ என்றால் மாடுகளைக் கொல்பவர் என்று பொருள். இவர்களுக்குப் பயிற்சியளிப்பதற்கென தனி மையங்களும் ஸ்பெயினில் இருக்கின்றன. காளைச் சண்டையில் பங்குபெறும் மாடுகள் போட்டியின்போது வாளால் வெட்டப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கொல்லப்படும். சில நேரங்களில் துணிச்சலாகச் சண்டையிடும் காளைகளுக்கு மன்னிப்புப் பெறும் வாய்ப்பு உண்டு. இந்தக் கருணையைப் பெறும் காளைகள் மட்டுமே உயிருடன் வீடு திரும்பும். காளைச்சண்டை ஆபத்தான, விலங்குகளைத் துன்புறுத்தும் விளையாட்டு என்று கூறி பீட்டா அமைப்பின் ஸ்பெயின் நாட்டுப் பிரிவு தொடர்ந்து பல்வேறு வழக்குகளைத் தொடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக கேட்டலோனிய பிராந்தியத்தின் சட்டப் பேரவை காளைச் சண்டைக்கு கடந்த ஆண்டு தடைவிதித்தது.

ஆனால், ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு இந்தத் தடையை விலக்கி உத்தரவிட்டது. காளைச் சண்டை என்பது ஸ்பெயின் நாட்டின் பண்பாட்டுடன் கலந்தது என்று கூறிய நீதிபதிகள், மரபு ரீதியாக தொடர்ந்துவரும் வழக்கத்தை சட்டென தடுத்துவிடக்கூடாது என்று தெரிவித்தார்கள். விலங்குகள் துன்புறுத்தப்படுவதாகக் கூறும் அதே நேரத்தில், காளைச் சண்டையின் பாரம்பரியப் பண்புகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். தேவைப்பட்டால், காளைச்சண்டையை ஒழுங்குபடுத்துவதற்கான விதிமுறைகளை வகுக்கலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதனால் ஸ்பெயின் முழுவதும் காளைச் சண்டைகள் தடையில்லாமல் நடைபெற்று வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com