
தன்னிடம் படிக்கும் கல்லூரி மாணவி ஒருவரின் குழந்தையை 3 மணி நேரமாக முதுகில் சுமந்துகொண்டு பாடம் எடுத்த கல்லூரி பேராசிரியைக்கு இணையவாசிகள் பாராட்டு மழை பொழிந்துள்ளனர்
அமெரிக்காவில் உள்ள சார்ஜியா க்வினெட் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருபவர் ரமடா சிசோகோ. இவர் வழக்கம் போல் தனது மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்துள்ளார். அப்போது அவரிடம் படிக்கும் இளம்பெண் ஒருவர் தன்னிடம் கைக்குழந்தை இருப்பதாலும், அதனைக் கவனிக்க ஆள் இல்லை என்றும் அதனால் வகுப்புக்கு வருவது கடினம் என்றும் தெரிவித்துள்ளார். நீங்கள் உங்கள் கைக்குழந்தையுடன் வகுப்புக்கு வாருங்கள் என பேராசிரியர் அனுமதி அளித்துள்ளார்.
குழந்தை கையில் இருந்தால் பாடத்தை கவனிப்பது, எழுதுவது தடையாக இருக்கும் என நினைத்த ரமடா, குழந்தையை வாங்கி தன்முதுகில் கட்டிக்கொண்டு பாடம் எடுத்துள்ளர். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ரமடாவின் மகள், என் அம்மாதான் என் முன்னுதாரணம். அவரது மாணவியின் குழந்தையை தன் முதுகில் 3 மணி நேரமாக தாங்கிக்கொண்டு பாடம் எடுத்துள்ளார். இந்த உலகத்தையே தன் மகளைப்போல் பாவிக்கும் அம்மாவை நான் பெற்றிருப்பது என் அதிர்ஷ்டம்’’ என குறிப்பிட்டுள்ளார்.
அவரது பதிவை பலரும் பகிர்ந்து பேராசிரியர் ரமடாவை பாராட்டி வருகின்றனர். ரமடா உண்மையிலேயே ஒரு ஹீரோ என்றும், அவர் ஞானி என்றும் தெரிவித்துள்ளனர்.