சிரியா: மறைக்கப்படும் மறுபக்கம் !

சிரியா: மறைக்கப்படும் மறுபக்கம் !
சிரியா: மறைக்கப்படும் மறுபக்கம் !
Published on

சிரியாவில் நடக்கும் யுத்தம் அரசுத் தரப்பு, கிளர்ச்சியாளர் தரப்பு, ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் ஆகியவற்றைக் கொண்டது என்று கூறப்பட்டாலும், இதன் உண்மையான பரிமாணம் முற்றிலும் வேறானது. சிரியாவில் நடப்பது இன்னொரு மறைமுகமான பனிப்போர் போன்றது. அமெரிக்கப் படைகளும் ரஷ்யப் படைகளும் ஒரே இடத்தில் வெவ்வேறு அணியில் இருந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. 
அமெரிக்கா, கிளர்ச்சியாளர்கள் தரப்புக்கும், ரஷ்யா அரசுப் படைகளுக்கும் ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கின்றன. 
இந்த இரு அணியினருக்கும் பொது எதிரி ஐ.எஸ். இயக்கம். வெவ்வேறு பக்கங்களில் இருந்து ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிரான தாக்குதல்களை இருதரப்புமே நடத்திக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் அவ்வப்போது, ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உரசல்கள் நடப்பதையும் தவிர்க்க முடியவில்லை. 

தற்போது ஐ.எஸ். இயக்கத்தின் வலிமை குறைந்திருக்கும் நிலையில், கிளர்ச்சியாளர்கள் தரப்புக்கும் அரசுத் தரப்புக்கும் இடையேயான யுத்தம் தீவிரமடைந்திருக்கிறது. ஏற்கெனவே கிளர்ச்சியாளர்களிடம் இருந்த அலெப்போ, இட்லிப் போன்ற பிராந்தியங்களை ரஷ்ய ஆதரவுடன் அரசுப் படைகள் மீட்டிருக்கின்றன. கிளர்ச்சியாளர்களின் கடைசித் தளமான கவுட்டாவில் தற்போது சண்டை நடந்து வருகிறது. 
சிரியாவில் அரசுக்குச் சொந்தமான லடாகியா படைத் தளத்தை ரஷ்யா பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் வான்படைகள் மட்டுமல்லாமல் தரைப்படையையும் அரசுக்கு ஆதரவாகச் சண்டையிட்டு வருகின்றன. ரஷ்யக் கப்பல்கள், சிரியாவின் கடற்கரைப் பகுதிவரை கூட வந்து சண்டையிட முடியும். இதனால் ஹெலிகாப்டர்கள், விமானங்கள், ராக்கெட்டுகள் உள்ளிட்டவற்றைக் கொண்டு கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.


சிரியாவில் எந்தக் கிளர்ச்சிக் குழுவுக்கு அமெரிக்கா ஆயுதம் வழங்குகிறதோ, அதே கிளர்ச்சிக் குழுவை தாக்கி அழித்துக் கொண்டிருக்கிறது ரஷ்யா. அலெப்போ பிராந்தியத்திலும், அதன் பிறகு இட்லிப் பிராந்தியத்திலும் நடந்த தாக்குதல்கள் இதற்கு மிகச் சிறந்த சான்றுகள். தற்போது கிழக்கு கவுட்டாவிலும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. 
ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்க வேண்டும் என்ற இலக்கு ஒருபுறம் இருந்தாலும், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு எதிரான போர் முடிவடையும் தருணத்தில் சிரியாவை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதும் இந்த யுத்தத்தின் நீண்டகால இலக்கு. சிரியாவில் நடக்கும் இந்தச் சண்டையில் இன்னொரு பனிப்போர் ஒளிந்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com