உலகம் முழுவதும் பருவநிலை நெருக்கடி ! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

உலகம் முழுவதும் பருவநிலை நெருக்கடி ! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்

உலகம் முழுவதும் பருவநிலை நெருக்கடி ! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்
Published on

உலகம் முழுவதும் பருவநிலை நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பனிப்பாறைகள் உருகுதல், கடல் நீர்மட்டம் உயர்வு, பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம், பருவங்களில் மாற்றம் இவை அனைத்துமே பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள். இவை குறித்து அவ்வப்போது விஞ்ஞானிகள் எச்சரித்த வண்ணமே உள்ளனர். ஆனால், ஒவ்வொரு முறை இத்தகைய ஆய்வறிக்கைகள் வெளியாகும் போதும் இது நமக்கானது அல்ல என அவற்றை எளிதாக கடந்து சென்றுவிடுகிறோம். அதன் விளைவுதான் நாம் தற்போது அனுபவிக்கும் காற்று மாசு, வறட்சி உள்ளிட்ட பிரச்னைகள். 

பருவநிலை மாற்ற பாதிப்புகளை தடுக்க வேண்டும் என அறிவுறுத்தி வந்த விஞ்ஞானிகள் முதல்முறையாக உலகம் முழுவதும் பருவநிலை நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். பயோ சைன்ஸ் இதழில் வெளியாகி இருக்கும் ஆய்வறிக்கையை 153 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரம் விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர். 40 ஆண்டுகளாக உலகில் நிகழ்ந்த மாற்றம், மக்கள்தொகை நிலவரம், வனங்களின் பரப்பு, எரிபொருள் பயன்பாடு உள்ளிட்டவற்றை கணக்கில் எடுத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டிருக்கிறது. பருவநிலை மாற்ற பாதிப்புகளை தடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்காவிட்டால் கற்பனை செய்ய முடியாத பாதிப்புகளை மனித குலம் சந்திக்க நேரிடும், பாதிப்பின் தீவிரத்தை உலகுக்கு எடுத்துரைப்பது விஞ்ஞானிகளின் தார்மீக கடமை என இந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பலமுறை எச்சரிக்கை விடுத்தாலும் புவி வெப்பம், பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றம் உள்ளிட்டவற்றின் அளவு அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றன என்கின்றனர் இந்த ஆய்வில் பங்கேற்ற விஞ்ஞானிகள். பருவநிலை மாற்ற பாதிப்புகளை தடுக்கும் பொருட்டு கடந்த 2015ஆம் ஆண்டு உலக நாடுகள் இணைந்து பாரீஸில் மிக முக்கியமான ஒப்பந்தம் மேற்கொண்டன. கார்பன் வெளியீட்டை குறைக்க வேண்டும் என்ற அந்த ஒப்பந்தத்தை பெரும்பாலான நாடுகள் நடைமுறைப்படுத்தவே இல்லை. உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்கா அந்த உடன்பாட்டில் இருந்தே விலகியுள்ளது. இந்த நிலையில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலான பொருளாதார திட்டத்தை உருவாக்க வேண்டும், புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை முற்றிலுமாக குறைத்து புதுப்பிக்க தக்க எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்கின்றனர் விஞ்ஞானிகள். 

வனங்களின் பரப்பை அதிகரித்தல், மாமிசம் உண்ணும் பழக்கத்தை குறைத்தல், உலக மக்கள் தொகையை கட்டுப்படுத்துதல் என்பன உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்ற பாதிப்புகளை தடுக்க உலகமெங்கும் நடைபெறும் போராட்டங்கள் கவனம் பெற்றாலும், அடிமட்ட அளவில் இருந்து இதற்காக மாபெரும் இயக்கம் தொடங்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். பருவநிலை மாற்ற பாதிப்புகளை எளிதாக கடந்து விடாதீர்கள். அதன் விளைவு நாம் எதிர்பார்ப்பதை விட மிக மிக மோசமாக இருக்கும் என்பதே விஞ்ஞானிகள் மீண்டும் மீண்டும் நம் முன் வைக்கும் எச்சரிக்கை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com