மேகக் கடலில் மிதக்கும் கிறிஸ்து சிலை! AI வீடியோவா? இயற்கையின் அதிசயமா?
செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்
பிரேசிலின் புகழ்பெற்ற Christ the Redeemer என அழைக்கப்படும் மீட்பர் கிறிஸ்து சிலை, அடர்த்தியான வெள்ளை மேகங்களுக்கு மேலே மிதப்பது போன்ற தோற்றத்தில் பதிவாகியுள்ள புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்தக் காட்சிகள் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டவையா அல்லது இயற்கையாக நிகழ்ந்தவையா என்ற கேள்வியும் பலரிடையே எழுந்துள்ளது.
ரியோ டி ஜெனிரோ (Rio de Janeiro) நகரில் உள்ள கோர்கோவாடோ (Corcovado) மலையில் அமைந்துள்ள இந்த 30 மீட்டருக்கும் அதிக உயரம் கொண்ட சிலையின் அடிவாரத்தைச் சுற்றி மேகங்கள் சூழ்ந்துள்ளன. அதேவேளையில், மலையின் உச்சியில் அமைந்துள்ள சிலை மட்டும் தெளிவாகத் தெரிவதால், மேகக் கடலுக்கு மேலே கிறிஸ்து சிலை மிதப்பது போன்ற கண்கவர் தோற்றம் உருவாகியுள்ளது.
இந்தக் காட்சிகளை பிரேசிலிய ஆடியோவிஷுவல் (Audiovisual) நிபுணர் மார்சியோ அமரோ மற்றும் ஆன்ட்ரேஸ் (Andrés) என்ற புகைப்படக் கலைஞர் ஆகியோர் பதிவு செய்துள்ளனர். செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டவை போல் தோன்றினாலும், இவை இயற்கையின் அற்புதமான நிகழ்வு என்பதை அறிந்து சமூக வலைதளங்களில் பலரும் வியந்து வருகின்றனர்.
இந்த நிகழ்வு ‘ஓரோகிராபிக் லிஃப்ட்’ (Orographic Lift) என்று அழைக்கப்படுகிறது. அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து வரும் ஈரப்பதம் நிறைந்த காற்று, 710 மீட்டர் உயரமுள்ள கோர்கோவாடோ மலையைச் சந்திக்கும்போது மேல்நோக்கி நகர்கிறது. அப்போது காற்று குளிர்ந்து, நீராவி ஒடுங்குவதால் மேகங்களும் பனிமூட்டமும் உருவாகின்றன. இதனால் மலையின் அடிப்பகுதி மேகங்களால் மறைக்கப்பட்டு, உச்சிப் பகுதி மட்டும் வெளியே தெரிகிறது.
1931-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்தச் சிலை, டிஜுகா தேசியப் பூங்காவில் அமைந்துள்ளது. உலகின் புதிய ஏழு அதிசயங்களில் ஒன்றாகவும் இது திகழ்கிறது.
செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டதுபோல் தோன்றும் இந்தக் காட்சி, உண்மையில் இயற்கையின் அறிவியல் நிகழ்வு என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேகங்களுக்கு மேலே கம்பீரமாகக் காட்சியளிக்கும் கிறிஸ்து சிலையின் இந்த அரிய தோற்றம், இயற்கையின் அழகையும் வலிமையையும் மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது!

