”தாயும் நானே தந்தையும் நானே..” பாலின மாற்றத்தை தைரியமாக எதிர்கொண்ட பெண்.. சீனாவில் நடந்த ஆச்சரியம்!
சவுத் சைனா மார்னிங் போஸ்ட்டின் படி, தென்மேற்கு சீனாவைச் சேர்ந்தவர் 59 வயதானவர் லியு என்ற பெண். இவர் பிஷன் கவுண்டியில் உள்ள ஒரு கிராமத்தில் வளர்ந்தவர்.
லியு தனது சிறு வயதிலிருந்தே வழக்கிற்கு மாறான சில விஷயங்களை செய்வதிலும் ஆர்வம் படைத்தவராக இருந்துள்ளார். சிறிய முடியை வைத்துக்கொள்ள விரும்புவது, ஆண்களைப் போல ஆடையை அணிந்து கொள்வது என தனது சகாக்களிடமிருந்து வேறுபட்டவராகவே இருந்து வந்துள்ளார்.
இந்தநிலையில்தான், லியுவின் வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. லியுவிற்கு 18 வயது இருக்கும்பொழுது, டாங்க் என்ற நபருடன் திருமணமும் நடந்துள்ளது. திருமணம் நடந்த 1 வருடத்தில் ஒரு மகனும் பிறந்துள்ளார். இதன்பிறகுதான், லியுவின் உடலில் புரிந்துக்கொள்ள முடியாத ஒரு சில மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளது.
லியுவின் உடலில் அதிகரித்த ஆண்ட்ரோஜெனிக் ஹார்மோன் காரணமாக, அவருக்கு தீடிரென தாடியும், ஆண்களின் உடல் அமைப்பும், இனப்பெருக்க உறுப்பும் உருவெடுக்க தொடங்கியுள்ளது.
லியுவின் இந்த மாற்றம் லியுவின் கணவருக்கு அதிசயத்தை ஏற்படுத்த, இறுதியில் லியுவை விவாகரத்தும் செய்துள்ளார். விவாகரத்துக்கு பிறகு தனது மகனை தனது கணவரோடு விட்டுவிட்டு புதிதாக வாழ்க்கையை தொடங்க முடிவு செய்துள்ளார் லியு.
இதனால், தான் வசித்து வந்த கிராமத்தை விட்டு வேறொரு இடத்திற்கு குடி பெயர்கிறார். இதன்பிறகு காலணி தொழிற்சாலை ஒன்றில் பணிப்புரிந்து வந்துள்ளார். அங்கு சௌ (zhou )என்ற சக பெண் ஊழியரிடம் நட்பு ஏற்பட்டுள்ளது. இது காதலாக மாற நினைத்த நேரத்தில், தனது தனிப்பட்ட உடல்நிலை சார்ந்த விஷயத்தால், லியு அடுத்தக்கட்டத்திற்கு இதை கொண்டு செல்ல விரும்பவில்லை.
இவை அனைத்தையும் அறிந்துகொண்ட சௌ , லியுவை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார். சீனாவை பொருத்தவரை ஓரினச்சேர்க்கை திருமணம் சட்டப்படி அங்கீகாரம் பெறாது என்பதால், அடையாள அட்டையின் படி பெண்ணாக இருக்கும் லியுவுக்கும் சௌவிற்கு நடக்கவிருந்த திருமணம் தடைப்பட்டது.
பின்னர், அவர் உதவிக்காக தனது முன்னாள் கணவர் டாங்கிடம் சென்று தனது மனதில் இருந்த யோசனையை கூறியுள்ளார். அதன்படி, டாங் சௌவ்வை திருமணம் செய்துக்கொள்ள, லியுவும் சௌவும் ஒன்றாக வாழ முடிவு செய்தனர், வாழ்ந்தும் வந்துள்ளனர். இந்தநிலையில்தான், 2000 களின் முற்பகுதியில் சௌ கற்பமாகி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இப்படி, சிக்கலான தங்களது வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தை இருவரும் இணைந்து உருவாக்கினர். தற்போது, இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஒருக்குழந்தை லியுவை அம்மா என்றும், மற்றொரு குழந்தை அப்பா என்றும் அழைக்கிறது.
இப்படி, தாயாகவும் தந்தையாகவும் தனது வாழ்க்கையை தொடர்ந்து வருகிறார் லியு. இந்த சம்பவம் சீன சமூக ஊடக தளங்களில் பரவலான விவாதத்தையும் தூண்டியுள்ளது.