பெண்ணின் பித்தப்பையில் 200 கற்கள்: காலை உணவை தவிர்த்ததால் விபரீதம்
சீனாவில் ஒரு பெண்ணின் பித்தப்பையில் இருந்து 200 கற்கள் அகற்றிய மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
சீனாவின் ஹெய்சுவில் உள்ள குவன்ஜி மருத்துவமனைக்கு கடுமையான வயிற்றுவலி காரணமாக சென் என்ற பெண் சிகிச்சைக்காக வந்தார். சென்-க்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் பெண்ணின் பித்தப்பையில் கற்கள் உள்ளது தெரியவந்தது. அறுவைசிகிச்சை மூலம் கற்களை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தனர். அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் கற்களின் எண்ணிக்கையைப் பார்த்து மிரண்டு போயினர்.
சென் பித்தப்பையிலிருந்து 200 கற்களை மருத்துவர்கள் அகற்றினர். அவற்றில் சில கற்கள் கோழி முட்டையின் அளவில் இருந்துள்ளன. சென் கடந்த 10 ஆண்டுகளாக காலை உணவை தவிர்த்ததுதான், கற்கள் உருவாகக் காரணம் என்று மருத்துவர்கள் கண்டறிந்தனர். தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் காலை உணவு உட்கொள்வதில்லை. அதனால் கற்கள் மட்டுமல்ல, இதுபோன்ற பல்வேறு உடல் உபாதைகள் வர வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.