”தூங்காத தூங்காத..” வீட்டுப்பாடம் முடிக்காத மகனுக்கு ரஜினி பட பாணியில் தண்டனை கொடுத்த தாய்

”தூங்காத தூங்காத..” வீட்டுப்பாடம் முடிக்காத மகனுக்கு ரஜினி பட பாணியில் தண்டனை கொடுத்த தாய்
”தூங்காத தூங்காத..” வீட்டுப்பாடம் முடிக்காத மகனுக்கு ரஜினி பட பாணியில் தண்டனை கொடுத்த தாய்

குழந்தைகள் பள்ளியில் கொடுத்த வீட்டுப்பாடங்களை செய்வதில் இருந்தும், படிப்பதில் இருந்தும் தப்பிக்க பல்வேறு வழிகளை கையாள்வது உண்டு. அதேச் சமயத்தில் தனது குழந்தைகளை படிக்க வைப்பதில் பெற்றோர்கள் மேற்கொள்ளும் உத்திகளும் சவாலானதாகவே இருக்கும்.

இப்படி இருக்கையில், வீட்டுப்பாடம் எழுதாமல் பள்ளிச் சிறுவன் டிவி பார்த்ததை அறிந்ததும் அந்த சிறுவனுக்கு அவனது பெற்றோர் கொடுத்த தண்டனைதான் தற்போது சமூக வலைதளங்களில் படு வைரலாக பரவி வருகிறது.

மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவனிடம் பள்ளியில் கொடுத்த வீட்டுப்பாடங்களை முடித்துவிட்டு இரவு 8.30க்குள் படுத்து தூங்கும்படி சொல்லிவிட்டு அவனது பெற்றோர் வெளியேச் சென்றிருக்கிறார். ஆனால், பெற்றோர் வெளியே சென்றதும் அந்த சிறுவன் வீட்டுப்பாடத்தை முடிக்காமல் அவர்கள் வரும் வரைக்கும் டிவி பார்த்து வந்திருக்கிறான்.

இந்நிலையில், வீடு வந்து சேர்ந்த சிறுவனின் பெற்றோர், தனது மகன் வீட்டுப்பாடத்தை முடிக்காமல் டிவி பார்த்துக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள். ஆனால் சிறுவனோ பெற்றோர் வந்ததும் திபுதிபுவென அறைக்குச் சென்று படுத்து தூங்கப் போயிருக்கிறான்.

இதனைக் கண்டு இன்னும் கடுப்பான சிறுவனின் தாயார், தூங்கப் போன மகனை மெனக்கெட்டு இழுத்து வந்து, வீட்டுப்பாடம் முடிக்காமல் தாங்கள் வரும் வரை டிவி பார்த்ததற்கு தண்டனையாக, அருணாச்சலம் படத்தில் அப்பா ரஜினி சுருட்டு பழக்கத்தை கைவிடுவதற்காக ஒரு இரவு முழுவதும் சுருட்டு புகைத்தாக கூறும் காட்சியை போல விடிய விடிய டிவியை போட்டுவிட்டு மகனை பார்க்க வைத்திருக்கிறார்.

முதலில் ரிலாக்ஸாக டிவி பார்த்துக் கொண்டிருந்த அச்சிறுவன், போகப் போக தூக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் சொக்கி விழுந்தாலும் பக்கத்திலேயே உட்கார்ந்து தின்பண்டங்களை கொடுத்து டிவி பார்க்க வைத்திருக்கிறார் சிறுவனின் அம்மா.

இப்படி செய்தால் இனி தன் மகன் டிவி பார்ப்பதையே விட்டுவிடுவான் என எண்ணி இவ்வாறு அந்த அம்மா செய்திருக்கிறார். மேலும் இது குறித்த வீடியோவும் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி கலவையான விமர்சனங்களையும் பெற்றிருக்கிறது.

அதில், “இதேப்போன்று நானும் அனுபவித்திருக்கிறேன். என்னுடைய 3 வயது மகனுக்கு கே.எஃப்.சி சிக்கன் ரொம்ப பிடிக்கும். அதனால் 3 நாட்களுக்கு தொடர்ந்து அதையே வாங்கி கொடுத்தேன். பிறகு அந்த சிக்கன் மீதான ஆசையே என் மகனுக்கு போய்விட்டது” என ஒருவர் பதிவிட்டிருக்கிறார். அதே நேரத்தில், “இந்த மாதிரியான தண்டனை கடுமையானதுதான்.” என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com