நேபாள பிரதமரைக் காப்பாற்றும் முயற்சியில் சீனா: காய் நகர்த்தும் சீன தூதர்!!
இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு காரணமாக நெருக்கடியில் சிக்கியிருக்கும் நேபாள நாட்டு பிரதமர் ஷர்மா ஒலியைக் காப்பாற்றுவதற்கு சீனா முயற்சி செய்வதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவும் நேபாளமும் எல்லை தொடர்பாக உரசிக் கொண்டிருந்தபோது, காத்மாண்டு நகரில் மிக ரகசியமான சந்திப்புகள் நடைபெற்றன. ஆளுங்கட்சியின் மூத்த தலைவர் மாதவ் குமாரையும், அதிபர் பண்டாரியையும் அரசியலுக்குத் தொடர்பே இல்லாத ஒரு பெண் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். அவரது பெயர் ஹூ யாங்கி. நேபாளத்துக்கான சீன நாட்டின் தூதர். இந்தியாவுடனான எல்லைப் பிரச்னை தொடர்பாக ஆளுங்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு, பிரதமரின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும்போது நடைபெற்றதால் இந்தச் சந்திப்புகள் சந்தேகத்துக்கு வித்திட்டன. மரபுப்படி இதுபோன்ற சந்திப்புகளின்போது, வெளியுறவுத் துறை அதிகாரிகள் உடன் இருந்திருக்க வேண்டும்; அதை மீறி சந்திப்புகள் ரகசியமாக வைக்கப்பட்டது ஏன் என்று கேள்வி எழுந்தது.
50 வயதான ஹூ யாங்கி, ஒரு நாட்டின் தூதர் என்பதுடன் சமூக வலைத்தளங்களிலும் பிரபலமானவர். நேபாளத்தின் அழகான இயற்கைக் காட்சிகளையும், சமூக ரீதியிலான நிகழ்வுகளையும் பதிவிடுவார். வல்லமைமிக்க தூதர் என்றும் தம்மைப் பற்றிக் குறிப்பிடுவார். பொதுவெளியிலும் சாந்தமானவர் என்றே அவரைப் பற்றி அறியப்பட்டிருக்கிறது.
ஆனால் அரசியல் ரீதியான அவரது நகர்வுகள் இன்னொரு பக்கத்தைக் காட்டியிருக்கின்றன. இந்தியப் பகுதிகளை இணைந்து நேபாளத்தின் புதிய வரைபடம் வெளியிடப்பட்டதிலும் இவருக்குப் பங்கிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் பிரதமர் ஷர்மா ஒலி தொடர்ந்து பதவியில் நீடித்திருக்க வேண்டும் என்று ஹூ யாங்கி விரும்புகிறார். இதற்காகவே ஒலிக்கு எதிராகச் செயல்படும் தலைவர்களை அவர் சந்தித்து வருகிறார். ஒலியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான பிரசந்தாவையும் அவர் சந்தித்திருக்கும் வாய்ப்புண்டு.
ஹாங்காங் பாதுகாப்பு மசோதா தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில் சீனாவுக்கு ஆதரவாக நேபாளம் ஆதரவளித்தது. இதில் ஹூ யாங்கி முக்கியப் பங்காற்றியிருக்கிறார். இந்தியாவுக்கு எதிரான பிரதமராகக் கருதப்படும் ஷர்மா ஒலியை பதவியில் நீடித்திருக்கச் செய்வதிலும் அவர் வெற்றிபெறக்கூடும் என்று அரசியல் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்

