’ஒவ்வொரு தலைமுறையிலும் 40% மக்களை சீனா இழக்கும்’ - எலான் மஸ்க் எச்சரிக்கை

’ஒவ்வொரு தலைமுறையிலும் 40% மக்களை சீனா இழக்கும்’ - எலான் மஸ்க் எச்சரிக்கை
’ஒவ்வொரு தலைமுறையிலும் 40% மக்களை சீனா இழக்கும்’ - எலான் மஸ்க் எச்சரிக்கை

சீனாவில் குழந்தை பிறப்பு குறைந்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள டெல்ஸா நிறுவனர் எலான் மஸ்க், இனி வரும் ஒவ்வொரு தலைமுறையிலும் 40 சதவீத மக்கள்தொகையை அந்நாடு இழக்கும் என எச்சரித்துள்ளார்.

டெல்ஸா நிறுவனரும், உலகிலேயே முதன்மை பணக்காரரான எலான் மஸ்க், பொழுதுபோக்கு, சமூக பிரச்னைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் வெளியிட்ட பல பதிவுகள், உலக அளவில் பெரும் விவாதப் பொருளாகவும் மாறி இருக்கின்றன. அந்த வகையில், கடந்த சில மாதங்களாகவே உலக மக்கள்தொகை குறைந்து வருவதால் மனித சமூகம் சந்திக்க போகும் பிரச்னைகள் குறித்து எலான் மஸ்க் அவ்வப்போது ட்வீட் செய்து வருகிறார்.

இந்நிலையில், உலக மக்கள் தொகை சீர்குலைந்து வருவதை பிபிசி கட்டுரையை அடிப்படையாக கொண்டு எலான் மஸ்க் இன்று ஒரு ட்வீட்டை பதிவிட்டிருக்கிறார். அதில், "சீனாவில் இன்னும் ஒரு குழந்தை கொள்கை தான் இருக்கிறது என நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். அந்நாட்டில் மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள 6 ஆண்டுகளுக்கு முன்பாகவே அனுமதி அளிக்கப்பட்டு விட்டது. ஆனால், இன்றளவும் சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாகவே உள்ளது. கடந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவு குறைவான குழந்தை பிறப்பு விகிதம் சீனாவில் பதிவாகி இருக்கிறது. குழந்தை பெற்றெடுக்கும் ஆர்வம் சீனர்கள் இடையே வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் வரும் காலங்களில் ஒவ்வொரு தலைமுறையிலும் 40 சதவீத மக்கள் தொகையை சீனா இழக்கும். இது, உலக மக்கள் தொகையில் பெரும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்" எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, பிபிசி வெளியிட்டிருக்கும் கட்டுரையில் சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் மிகவும் குறைந்து வருவதாக கூறப்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டு அந்நாட்டில் வெறும் 4 லட்சத்து 80 ஆயிரம் குழந்தைகளே பிறந்திருக்கின்றன. 1980-ம் ஆண்டு சீனாவில் 2.6 சதவீதமாக இருந்த குழந்தை பிறப்பு விகிதம் 2021-இல் 1.5 சதவீதமாக குறைந்துவிட்டதாக அந்தக் கட்டுரை தெரிவிக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com