தொடரும் வர்த்தகப்போர் | ”அமெரிக்காவுடன் கூட்டு சேர்ந்தால்..” - சீனா கடும் எச்சரிக்கை!
அதிபராக பொறுப்பேற்றது முதல், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற கொள்கையுடன் செயல்பட்டுவரும் ட்ரம்ப், சமீபத்தில் உலக நாடுகளுக்கு பரபஸ்பர வரிவிதிப்பை அமல்படுத்தியிருந்தார். கடந்த 9ஆம் தேதி முதல் அந்த வரிவிதிப்பு தொடங்க வேண்டிய நிலையில், வணிகப் போர், சர்வதேச பங்குச் சந்தைகளின் சரிவு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை போன்றவற்றின் காரணமாக அதை 90 நாட்களுக்கு ட்ரம்ப் நிறுத்திவைத்துள்ளார். எனினும், இந்தப் பட்டியலில் சீனாவைத் தவிர்த்துள்ளார். எனினும், அந்த நாட்டுக்கு தொடர்ந்து வரிவிதிப்பையும் உயர்த்தி வருகிறார். பதிலுக்குச் சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரிவிதிப்பை உயர்த்தி வருகிறது. தற்போது, சீனப்பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 145% ஆக உயர்த்திய நிலையில் அதற்கு சீனா, அமெரிக்க பொருட்களுக்கான 125% ஆக அதிகரித்துள்ளது. மேலும், இதை 245 சதவீதமாக உயர்த்துவதாகவும் அமெரிக்கா அறிவித்தது.
இப்படி அமெரிக்கா மற்றும் சீனா இடையே வர்த்தகப் போர் தீவிரமடைந்துவரும் நிலையில், உலக நாடுகளும் கலக்கமடைந்துள்ளன. இதற்கிடையே ட்ரம்ப் அரசை சந்தித்து வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள், பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அந்த நாடுகளிடம் சீனாவில் இருந்து பொருட்களை வாங்குவதைக் குறைத்துக்கொண்டால் வரி விதிப்பில் சலுகை தருவதாக அமெரிக்கா நிர்பந்தம் தருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், ”சர்வதேச வர்த்தகத்தில் தங்களை தனிமைப்படுத்த அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளுக்கு துணைபோகும் நாடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என சீனா எச்சரித்துள்ளது. இதுகுறித்து சீன வர்த்தக அமைச்சகம், ”அமெரிக்காவுடனான வர்த்தப் போரை தீர்க்கும் நாடுகளுக்கு மதிப்பு கொடுப்போம். அமெரிக்கா மட்டுமின்றி, எங்களை குறைத்து மதிப்பிடும் நாடுகளுடனும் எந்தவிதமான ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளப் போவதில்லை” எனவும் சீனா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்தியாவிடம் இருந்து இறக்குமதிகளை அதிகரிக்க தயார் - சீனா
இந்தியாவிடம் இருந்து அதிகளவு பொருட்களை இறக்குமதி செய்ய தங்கள் நாடு தயாராக உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இந்தியாவுக்கான சீன தூதர் சுஃபெய்ஹங் தெரிவித்துள்ளார். சீனாவின் நுகர்வோர் சந்தை மிகவும் பிரமாண்டமானது, அதை இந்தியா பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.
சீனாவுடனான வர்த்தக பற்றாக்குறை 100 பில்லியன் டாலர் அளவுக்கு உள்ளது இந்தியாவுக்கு கவலை தரும் விஷயமாக உள்ளது. இதை குறைக்கும் வகையில் இந்திய பொருட்களை வாங்கிக்கொள்ள சீனா முன்வந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாக பார்க்கப்படுகிறது. இந்தியாவுடன் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள அமெரிக்கா தீவிரம் காட்டும் நிலையிலும், பதில் வரி விதிப்பில் நிலவும் குழப்பங்கள், இழுபறிகளுக்கு இடையில் சீனாவின் அறிவிப்பு கவனம் பெறுகிறது.