தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க பாகிஸ்தானுடனான எல்லையை சீல் வைத்து பாதுகாப்பைப் பலப்படுத்த சீனா முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்க இயலாத பாகிஸ்தான் மீது சீனாவுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. பாகிஸ்தானை ஒட்டிய சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தின் ஹுவாட்டான் பகுதியில் தீவிரவாதிகள் கடந்த டிசம்பர் 28ல் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அந்தப் பகுதியில் சீன ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த 3 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் ஆயுத பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் ஜின்ஜியாங் மாகாணம் வழியாக சீனாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முயற்சி செய்வதாக அந்நாடு குற்றம்சாட்டி வருகிறது.
இதனால் பாகிஸ்தான் எல்லையை சீல் வைத்து பாதுகாப்பை அதிகரிக்கவும் ஜின் ஜியாங் மாகாண அரசு முடிவு செய்துள்ளதாக சீன அரசு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு பல்வேறு வகையிலும் சீனா நிதியுதவி செய்து வருவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில் இந்த செய்திச் செய்தி வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.